காங்கிரஸ் மூத்த தலைவர் ‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்’ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்..!
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.