மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிச.10 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 10 ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக மாறியது.
ஃபெஞ்சல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் இன்று மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் காற்று மணிக்கு 70- முதல் 80 கிமீ வேகத்திலும் இடையிடையே 90 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. மேலும் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுர, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது.
இதனால் தமிழக அரசு இதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தது. முதல்வர் ஸ்டாலின் தமிழக கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்ததாலும், சில இடங்களில் கரண்ட் இல்லாததாலும் மக்கள் சிரமமடைந்தனர்.
புயல், கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி வரை மின்கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி கட்டி கொள்ளலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.