முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக ‘அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ்’ பொறுப்பேற்பு..!
முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நியமித்தது. இதன் மூலம், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதுவரை தமிழக தேர்தல் அதிகாரியாக ஆண் ஐ.ஏ.ஸ் அதிகாரிகளே இருந்த நிலையில், முதன் முறையாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலை புதிதாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா பட்நாயக்கே தலைமையேற்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் நடத்தவுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு கேடர் ஐ.ஏஎஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். எப்படி தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெயரை தற்போது பெற்றுள்ளாரோ அதே மாதிரி கோவை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையையும் இவர் ஏற்கனவே பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராகவும் பணி செய்த அனுபவம் பெற்றவர் அர்ச்சனா பட்நாயக்.
தற்போது தமிழ்நாடு சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த அர்ச்சனா பட்நாயக் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.