மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!

 மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!

மதுரை மாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 70 அடி உயரம் கொண்ட
அணையாகும். இது அணையில் தேக்கப்படும் நீரானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்கும், குடிநீர் வாழ்வாதாரமாகும் விளங்கி வருகிறது. கடந்த சில நாள்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்த நிலையில், மழை நீரானது முல்லைப் பெரியாறு மூலம் ஆறுகளில் வழியாக வைகை அணையை வந்தடைந்தது. இதனால் வைகை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1309 கன அடியாக இருந்தது. மேலும் 4622 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று (நவ.10) முதல் வைகை அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், மதுரை மாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மதுரை யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள ஓபுளா படித்துறை – விரகனூர் வரை செல்லும் சர்வீஸ் சாலை, விரகனூர் – தத்தனேரி செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை மேய்க்கவும் வேண்டாம் எனவும் அதிகளவில் தண்ணீர் செல்லும் தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்ஃபி எடுக்க
முயற்சிக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...