காசிமேடு, எண்ணூரில் கடல் சீற்றம்..!
சென்னையில் திருவொற்றியூர், எண்ணூர் , காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும்.
அடுத்த 3 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 15-ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் காலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால்
சென்னை திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்படுவதால் கடற்கரைக்கு சென்ற மக்கள் அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர்.
எனினும் கடல் சீற்றத்தின் ஆபத்தை உணராமல் சிலர் செல்பி எடுத்து வருகிறார்கள். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை முதல் குமரி கடல் வரை உள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என சொல்லப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த காற்றழுத்தம் இலங்கை கடல் பகுதியை நோக்கி நகரும் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை மழை தொடரவுள்ளது.