மலேசியாவில் தலைவர் காமராஜர்…
1953-ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.
எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.
தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார்.
அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.
டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான்.
இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.
கடிதத்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.
வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ – என்று மனம் வருந்தினார்.
டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.
காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!
வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.
விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர்.
எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.
அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.
காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார்.
இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.
அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார்.
ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.
இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.
இன்று சர்வதேச வேட்டி தினம்…