தமிழர் திருநாள் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா
இரண்டாண்டுகளாகத் தமிழ்நாட்டில் எந்தப் பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடப்பட வில்லை. தற்போது கொரோனா சற்று குறைந்திருக்கிற நேரத்தில் கார்த்திகை தீபம் வந்திருக்கிறது. இருளை அகற்றி வெளிச் சத்தைப் பாய்ச்சும் திருவிழாதான் கார்த்திகைத் திருவிழா. இந்த மாதிரி விழா உலகத்தில் எங்குமே இல்லை. பக்தி மட்டுமல்ல, சுகாதாரம், கலாசாரம், பண்பாட்டைப் போற்றுகிற திருவிழா. தமிழர் திருநாளான இந்த விழாவைத் தமிழக அரசு விடுமுறை நாளாகவே அறிவிக்க வேண்டும்.
இந்த நாளில் வீடுகளில் விரதமிருந்து வீடுகளைச் சுத்தம் செய்து பக்தியோடு இருப்பர். ஆலயத்தில் தீபம் ஏற்றியவுடன் வீடுகளில் தீபம் ஏற்றி மகிழ்வார்கள். அதன் பிறகு பிள்ளைகள் சொக்கப்பனை எரித்து பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்.
இந்தக் கார்த்திகை மாதம் சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. சிவனின் அடி முடி காணாத பிரம்மாவும் திருமாலும் சிவனின் மகிமையைத் தெரிந்து கொள்ளும் விழாவாகவும் காமனின் கணையால் கோபமுற்ற சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமனை எரித்ததால் எழுந்த தீ ஆறு தாமரை மலர்களில் விழுகிறது. அதிலிருந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதுதான் ஆறுமுக முருகனாகப் பிறப் பெடுக்கிறார்.
கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றி னார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக் கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க சிவபெருமான் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை தீப விழா ஆகும்.
அசுரகுல அரசரான சூரபத்மன் மற்ற அனைத்து தேவர்களையும் சிறை பிடித்து கைது செய்தான். வானுலகம் வெறிச்சோடி இருந்தது. மூன்று உலகங்களிலும் பேய்களின் ஆட்சி நடந்தது. சிறையில் தள்ளப்பட்ட தேவர்களை அரக்கர்கள் கொடுமை செய்தனர். அந்தத் துயரங்களுக்கு உள்ளான சமயத்தில் பார்வதியின் முந்தைய அவதாரமான சதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினார். அதற்கு பார்வதியை அழைத்தார். ஆனால் சிவபெருமானை அழைக்க வில்லை.
இறுதியாக தேவர்கள் நொந்துபோய் பிரம்மன் மற்றும் திருமாலிடம் தோன்றி தங்கள் பிரச்சனைகளைக் கூறி நீங்கள் தலையிட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று வேண்டினர். அசுரர்களுக்குக் கிடைத்த அற்புத வரத்தின் காரணமாக அவர்களைச் சிவபெருமா னின் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று அவர்களிடம் பரிந்துரைத் தனர். ஆதலால் சிவபெருமானும் பார்வதி அம்மையும் ஒரு குழந்தையைப் பெற வேண்டும்.
சிவபெருமான் தியானத்தில் இருப்பதால் பார்வதியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அவர்கள் ஒரு விசித்திரமான யோசனையை நடைமுறைப்படுத்த ஆயத்த மாகினர். காதலின் கடவுளான மன்மதனை அணுகி சிவபெருமானின் கவனத்தை அவருக்கு சேவை செய்துகொண்டிருக்கும் பார்வதியின் மீது பார்வை விழ வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மன்மதனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று கந்தமாதான பர்வதத்திற்குச் சென்றார். அங்கு அவர் தனது வில்லிலிருந்து காதலைத் தூண்டும் அம்புகளை சிவபெருமானை நோக்கி எய்தி னார். அவை தனது தவத்திற்கு ஏற்பட்ட தொந்தரவாகக் கருதி கோபமடைந்த சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதனால் வெளியே வந்த தீப்பிழம்புகள் மன்மதனைச் சாம்பலாக பொசுக்கின.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனைத்து தேவர்களும் சிவபெரு மானை அமைதிப்படுத்த வழிபாடு செய்து தங்களுக்கு நேர்ந்த இன்னல்களைத் தெரிவித்து எங்களுக்கு உதவுவதற்குத் தான் மன்மதன் இவ்வாறு செய்ததாக மன்னிப்பு கோரினர். இதனால் சிவபெருமான் மனமிரங்கி மன்மதன் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருப்பான் என்ற சாபத்துடன் மன்மதனுக்கு உயிர் கொடுத்தார்.
மன்மதனை எரித்த அந்த ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கைக்கு அக்னி பகவனால் கொண்டுசெல்லப்பட்டன. அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக வடிவம் பெற்றிருந் தன. அந்த ஆறு குழந்தைகளும் ஆறு கார்த்திகை பெண்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டன.
சிவபெருமானும் பார்வதி அம்மையாரும் அந்த சரவண பொய்கைக்கு வந்திருந்தனர். அப்போது தாயான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாகக் கட்டித் தழுவி அவர்களை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜதம் மற்றும் ஆதோமுகம் ஆகிய ஆறு முகங்களுடன் ஒரே உருவமாக மாற்றி னார் என்று புராணக்கதை கூறுகிறது.
பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாகத் திகழ்வது திருவண்ணா மலை. அங்கு காலையில் திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.
இக்கொப்பரையை 1668-ல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார். பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப் படுகிறது.
கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளைப் போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல் களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்கார மாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இரவைப் பகலாக்கும் இந்தத் தீபத் திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடுப்படுகிறது.
எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காகத் தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.
திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது.
தீபத் திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
கார்த்திகை தீப விழாவை குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாகப் பிரித்து கோவில் மற்றும் வீடுகளில் கொண்டாடப்படுகிறது.
குமராலய தீபம் – கார்த்திகை மாதத்தில் முருகன் கோவிலில் கொண் டாடப்படும் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படு கிறது.
சர்வாலய தீபம்- மற்ற இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப் படும் கார்த்திகை மாதத்து முழுமதி திதியில் கொண்டாடப்படுகிறது.
விஷ்ணுவாலய தீபம்- கார்த்திகை மாதத்தில் விஷ்ணு கோவில்களில் கொண்டாடப்படும் ரோகிணி நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப் படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி… வாழ்வில் வளம் பெறுவோமாக!