News
7th December 2021
  • தொடர்
  • நிசப்த சங்கீதம் – 10| ஜீ.ஏ.பிரபா

நிசப்த சங்கீதம் – 10| ஜீ.ஏ.பிரபா

1 year ago
217
  • தொடர்
  • நிசப்த சங்கீதம் – 10| ஜீ.ஏ.பிரபா

காணுமிடந்தோறும் நின்றன் கண்ணொளி வீசுதடி
மானுடைய பேரரசே! வாழ்வு நிலையே கண்ணம்மா!

மனசு பொங்கியது.

சந்தோஷ நுரை கொப்புளிக்க, குபு குபுவென்று பொங்கிச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. சுக்கானையும் சாய் நாதனின் உணர்வுகள் தாக்கியது.

நம்ப முடியவில்லை. உண்மையா? இழந்த என் பொக்கிஷம் என்னிடமே திரும்பி வந்து விட்டது.இது கனவில்லையே!!

சாய் நாதன் இன்னும் நம்ப முடியாமல் தவித்தார்.

மனசு முழுதும் மலர்க் காடாகியது.

நம்ம குலதெய்வம் நம்ம வீட்டுக்கு வந்திருச்சி. ஒரு பாயாசம் வைக்கிறேன் எஜமான் என்று சுக்கான் ஓடினான்.

“டேய்,டேய் இருடா” சாய் நாதன் அவரை நிறுத்தினார்.

“உன் சம்சாரம் எப்படி இருக்கு? அதைச் சொல்லவில்லையே?”

“அதுக்கென்னா. எழுந்து உட்கார்ந்துருச்சு என்னைப் பாத்ததும்.” அவன் குரலில் பெருமிதம்.அவனை நினைக்கையில் இமயமலையாக உயர்ந்து நின்றான் சுக்கான்.

எத்தனை பெருந்தன்மை அவனிடம்.தன்னை உதறி ஓடியவள் என்ற வெறுப்பு இல்லாமல், இரு கை விரித்து அவளை ஏற்றுக் கொண்டான்.

உடம்பு அழிஞ்சு போறது எஜமான். மனசும் அதுல நிரம்பி வழியற அன்பும்தான் நிரந்தரம். வழி தவறிய ஆடு அவ. தேடிப் பிடிச்சு கொண்டாந்து எங்கிட்ட விட்டுருக்கு சாமின்னா என்ன அர்த்தம்?. எனக்கு அவதான்னு. சாமியோட செயல்ல அர்த்தம் இருக்கு. அதைச் சந்தேகப் பட்டு கேள்வி எல்லாம் கேட்கப் படாது. எல்லாம் அவளோட பிரசாதம். எங்கிட்ட இருந்து அவளைப் பிரிச்சது. இப்ப திருப்பியும் எங்கிட்ட கொண்டாந்து சேர்த்த்து எல்லாம் அவ செயல். நான் எல்லாத்தையும் மனசு நிறைஞ்சு வாங்கிக்கறேன்” நெகிழ்வோடு பேசினான்.

“எத்தனை நாளைக்கு இந்த வெறுப்பு, கோபம், பகை எல்லாம் எஜமான். அழியும் உடம்பு இது. அது அழியும் போது எல்லா அழிஞ்சுடும். அப்புறம் யார்கிட்ட இது அம்புட்டயும் காட்டப் போறோம்?இருக்கற வரை அன்பா ஒத்துமையா இருக்கலாமே” என்றவனை இருகக் கட்டிக் கொண்டார்.

“ரொம்ப நெகிழ்த்தறேடா நீ”

“எல்லாம் நீ கத்துக் கொடுத்ததுதானே, வசுவை நினைச்சுகிட்டு நீ வாழலையா? அப்படித்தான் இது.”

வாழ்க்கைங்கறது ஒரு குறுகிய வாய்ப்பு என்பார் அப்பா.

நிறைய வேகத்தடைகள், குறுகிய வளைவுகள், திருப்பங்கள் நிரம்பியது. எல்லாவற்றையும் தாண்டி அப்பாடான்னு போய் வெற்றிங்கற வீட்டை அடஞ்சா வாசல்ல எமன் வந்து நின்னு கதவைத் தட்டுவான். அவ்வளவுதாண்டா வாழ்க்கை.” என்பார்.

அன்னன்னிக்கு வாழ். அது கூட வேண்டாம். அந்தந்த நிமிஷத்துல் வாழ். அதைச் சந்தோஷமா வச்சுக்க.அடுத்த நிமிஷம் இதை விட அற்புதமா அமையும்” என்பார்.

ஒவ்வொரு நாளும் சிறப்பானதே – நீ நினைத்தால்
ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாததே- நீ உணர்ந்தால்
ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே- நீ அறிந்தால்
வாழ்க்கை அழகானது- நீ அதை வாழும் வகையில் வாழ்ந்தால்
நேர் மறையாகச் சிந்தி-மகிழ்ச்சியாக இருக்க காரணம் தேடாதே
வாழ்க்கையைக் கொண்டாடு,

பெரிய அட்டையில் எழுதி ஹாலில் தொங்க விட்டிருப்பார்.

வசு அதை மிகவும் ரசித்து அதை நடு ஹால் சுவற்றில் கோல்டன் கலரில் எழுதி வைத்தாள்.

“எதுக்கும்மா கோல்டன் கலர்?” அப்பா கேட்டார்.

“இதெல்லாம் பொன் எழுத்துல பொறிக்கப் பட வேண்டியவைப்பா” என்றதில் அப்பா அகமகிழ்ந்து போனார்.

பிறர் திறமைகளை மதிக்கத் தெரிந்தவள் வசு.

அப்பா மிக அற்புதமாக ஓவியம் வரைவார். ஆயில் பெய்ண்டிங்கில் அவர் வரைந்த காமாட்சி,அகிலாண்டேஸ்வரி, சாய்ராம் ஓவியங்கள் தத்ரூபமாக நேரில் பேசுவது போல் இருக்கும்.அதை அழகாக ஃபிரேம் செய்து, ஹால், முன் வாசல் என்று மாட்டினாள். வந்தவர்கள் எல்லாம் பார்த்துப் பாராட்டியதில் அப்பா பெருமையில் பூரித்துப் போனார்.

அதனால்தான் அவரால் வசுவைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அவ அறிவுக்கும், திறமைக்கும் அவள் இருக்க வேண்டிய இடம் இது இல்லை என்றவர் அவள் யூ.எஸ் செல்ல அனுமதித்தார்.

“போய்ட்டு வாம்மா. உன் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.இதை நாலு சுவத்துக்குள் ஒளிச்சு வைக்காதே.ஆனா உன் கடைசி நிமிஷத்துல் உன் புருஷன் பக்கத்துல வந்துடு, ஒரு கால கட்டம் வரைதான் இந்த வேலை,இது எதுவும் உன் கூட வராது.” என்று அனுமதித்தார்.

சென்றவள் அடுத்த முறை வந்த போது அவருக்கு ஓவியம் வரைய டிரைபாட் ஸ்டேன்ட் வாங்கித் தந்தாள். அப்பா அதை அதிகம் பயன்படுத்த மாட்டார். அடிக்கடி அதை எடுத்து தடவிப் பார்ப்பார்.

அவ அடித்துப் பாயும் நீர்வீழ்ச்சிடா. அவலை ஒரு பாட்டிலில் அடைத்து வைக்க முடியாது என்றவர் தன் இறுதி நேரம் நெருங்கி விட்ட்து என்ற போது மட்டும் கேட்டார்.

“வசுவைப் பார்க்க முடியுமா சாய்”

அம்மா இறந்த பத்தாம் நாள் அவள் காரியத்தை செய்த கையோடு கண் மூடிவிட்டார்.அவ போனாட்டு நான் இருக்க மாட்டேன்டா. அவ உயிர், நான் உடல். மனைவி இறந்து புருஷன் வாழறது கஷ்டம்டா. நடமாடும் கூடு. நான் கிளம்பிடுவேன். வசுவை மட்டும் பார்க்க முடிஞ்சா தேவலாம்” என்றார்.

அப்போது வசு ஜெனீவாவில் ஐடி கம்பெனிகளின் கருத்தரங்கில் இருந்தாள்.

மிகுந்த சிரமப் பட்டுத்தான் அவள் நம்பரைக் கண்டு பிடித்தார். ஆனாலும் அவளுடன் பேச முடியவில்லை. அவளுடைய பி.ஏ.விடம் விஷயம் சொல்லி அப்பா இறக்கும் அந்த அன்றுதான் பறந்து வந்தாள். படகு போன்ற கார். உடன் பாதுகாப்புக்கு வெளி நாட்டு செக்யூரிடி என்று பந்தாவாக வந்த வசுவை கண்கொட்டாமல் பர்த்தார்.

“சந்தோஷமா இருக்கியாம்மா?”

“இருக்கேம்பா.”

“நல்லது. சாய் நாதன் இல்லாம நீ சந்தோஷமா இருக்கே. ஆனா அவனை விட்றாதே.அவன் உன் ஞாபகத்துலதான் உயிர் வாழ்ந்துண்டு இருக்கான். எல்லாத்தையும் உதறிட்டு உன்னால் வர முடியுமா?”

வசு தயங்கினாள்.

“இது புது கம்பெனிப்பா. என்னை நம்பி ஆயிரம் கோடி இன்வெஸ்ட் செஞ்சிருக்காங்க. நான் உடனே வர முடியாதுப்பா.”

“புரியுதும்மா. நீ புலிவாலைப் பிடிச்சுண்டு ஓடிண்டு இருக்கே.விட முடியாது.இப்பவானும் ரெண்டு நாள் இருப்பியா?”

“அப்பா, ஜெனிவால கான்பிரன்ஸ். நான் ஒரு நாள் சொல்லிட்டு வந்தேன். மதியம் ஒரு மணிக்கு ஃபிளைட்.”

சரி, நீ நம்ம வீட்டுல ஒருவேளை சாப்பிடு.வந்து எனக்கு ஒரு பாட்டு பாடிட்டு கிளம்பு” என்றார். சாய் அவளைப் பார்த்தபடி நின்றார். அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றுப் போனாள்.சுக்கான் ஒரு கிண்ணத்தில் சாதம் பிசைந்து கொண்டு வந்து தந்தான். சாப்பிட்டு முடிவதற்குள் அப்பா நிலமை மோசமாகி விட்டது.

வசு அருகில் அமர்ந்து அவர் வாயில் கங்கா தீர்த்தம் ஊற்றினாள்.

“விலைபோக நினையாமல், வினைசூழத் தடுமாறி
வீண்போன நாட்களுண்டு-விதி போன வழியேகி
விடைகாண முடியாமல் விழிமூடி நின்றதுண்டு

இலையுதிரும் நேரத்தில் இவனிதய பீடத்தில்
இனிமை துளிர்த்ததென்ன!
இளவேனில் காலத்தின் இதமான நிலவாக
என் வானில் உதித்ததென்ன!
மெல்லிய குரலில் மயங்கி கண் மூடி இருந்தார்.

சாய் எழுதிய பாட்டா இது. அவனை மறக்கலைன்னு நீ பாடும்போதே தெர்கிறது. ம, பாடு என்றார்.

நிலை நின்ற தேராய் நானிருந்தேன் என்னுள்
நீ வந்தமர்ந்ததென்னே!
நீ வந்தமர்ந்ததும் நான்மாட வீதிகளில்
நான் உலாச் சென்றதென்ன!
பாடியவளின் குரலில் அந்த ஹாலே மெய் மறந்திருந்தது.

“நல்லா இரு” என்று முணுமுணுத்தார். பார்வை அவள் மேல் பதிந்து அப்படியே உறைந்து நின்றது.

கதறி அழுதாள் வசு.வாய் விட்டுக் கதறியவளைத் தேற்ற முடியாமல் திகைத்து நின்றது ஹால்.

அருகில் நெருங்கி தோளைத் தொட்டவரை கட்டிக் கொண்டு வாய் விட்டு அழுதாள். அவள் கூந்தலை மட்டும் தடவிக் கொடுத்தார் சாய் நாதன்.

“நான் கிளம்ப்றேன் சாய் என்று சட்டென விலகினாள்.

“நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை.என் வழி மாறிப் போச்சு சாய். அப்பா சொன்ன மாதிரி புலி வாலைப் பிடிச்சுண்டு ஓடிண்டு இருக்கேன். விட முடியாது. நான் வருவேன்கற எண்ணத்தை மனசுலேர்ந்து அழிச்சுடு. நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சுக்க.” என்றாள்.

“நீ என்ன பண்ணப் போறே?”

“நான் இன்னொருத்தரை என் வாழ்வில் நுழைய விட முடியாது சாய். நான் உன் மார்பில் சாய்ந்தவ. இன்னொருத்தரை ஏற்க முடியாது.”

“நானும் அப்படித்தான். புகழ், லைம் லைட் தேடி ஓடிட்டு இருக்கே.இது ஒரு நாள் அலுத்துப் போகும். அப்போநீ வருவே.அந்த நம்பிக்கை எனக்கு உண்டு. நீ கிளம்பு.ஃபிளைட்டுக்கு டைம் ஆச்சு” என்றவர் கார் வரை கூட வந்தார்.

அந்தச் சொல்லை இருவரும் மறக்கவில்லை.

வசுவை ஹாஸ்பிடலில் பார்த்ததுமே சுக்கான் சாய் நாதனுக்கு போன் செய்து விட்டான்.அப்போது அவர் சேலம் போய் இருந்தார். அவரின் சித்தப்பா ஒருத்தர் அங்கிருந்தார். வீட்டுக்குப் பெரியவர் என்று அவர்தான் இப்போது இருந்தார்.சந்தீப்பின் கல்யாணத்திற்கு அவரை அழைத்து விட்டு அங்கேயே பத்திரிக்கை அடிக்கத் தந்து விட்டு வரலாம் என்று போயிருந்தார்.

சித்தப்பா பையனே பிரஸ் வைத்திருந்தார்.அவனுக்கு ஒரு உதவியாக இருக்கும் என்று நினைத்தார் சாய். உடனே கிளம்பி வர முடியவில்லை. மறு நாள்தான் வந்தார்.அதற்குள் வசு கிளம்பி பெங்களூர் போய் விட்டாள்.எதோ முக்கியமான வேலை என்றாள் ஹர்ணி.

என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. வந்து விடுகிறேன் என்று மட்டும் கூறி விட்டுப் போனாள்.அவளிடம் ஒரு கடினம் தெரிந்தது.உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கிளம்பி விட்டாள்.

துடித்தது அவரின் மனம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்ற பயம். நோய் தாக்கிய அவளைத் தன் கைக்குள் வைத்துக் காப்பாற்றி விட வேண்டும் என்ற பரபரப்பு அவரிடம்.

விஷயம் தெரிந்த சந்தீப் கூட திகைத்துப் போனான். அவனிடம் வசுவைப் பற்றி தவறாகச் சொல்லி வைக்கவில்லை. நல்ல விதமாக, அறிவு, திறமை பற்றி உயர்வாகச் சொல்லி வைத்திருந்தார்கள். உங்கம்மா மாதிரி உனக்குப் புத்தி என்பார் சாய் நாதனின் அம்மா.

அவன் வசுவை ஹாஸ்பிடலில் பார்த்திருக்கிறான். பார்த்த அந்தக் கணமே அவள் மேல் ஒரு மதிப்பு. அந்தக் கம்பீரம்,பேச்சில் தெரிந்த ஆளுமைஅவனை மிகவும் கவர்ந்தது.அவன் மனதில் வசுவைப் பற்றிய ஒரு உயர்ந்த எண்ணங்களை விதைத்திருந்தார் சாய் நாதன். சுக்கானும் தன் பங்குக்கு இது உங்கம்மா சொன்னது, உங்கம்மா தெய்வம், உங்கம்மாவுக்கு நல்ல மனசு என்று எல்லாவற்றையுமே நல்லவிதமாகச் சொல்லிதான் வளர்த்தார்கள்.

நிச்சயம் வசு ஒரு நாள் வருவாள்.அப்போது சந்தீப் அவளை வெறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள், சந்தீப்புமே அவளைப் பார்க்கத் துடித்தான்.

“அப்பா, அம்மாவும் நீயும் ஜோடியா நின்னு என் கல்யாணத்தை நடத்தித் தர வேண்டும்” என்றான்.

“நம்ம வீட்டுல ஒரு வெறுமை இருந்தது அப்பா. அது எல்லாம் விலகி ஒளி வருது. நீ அம்மாவை மன்னிச்சிடணும்” என்றான்.

“அவளை எதுக்குடா நான் மன்னிக்கணும்? என்ன தப்பு செஞ்சா? இன்னொருத்தன் கூட இருபது வருஷம் வாழ்ந்துட்டு வந்தவளையே சுக்கான் மன்னிச்சு மனைவியாய் ஏத்துகறப்போ வசு என் நினைவிலேயே வாழறவடா. தன் திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்கணும், எல்லா நாடுகளும் சுற்றிப் பாக்கணும்னு விரும்பினா. அவ உணர்வுகளுக்கு நான் மதிப்பு கொடுத்தேன்” என்றார் சாய் நாதன்.

வசு அவரையும் சேர்த்துதான் கூப்பிட்டாள்.

ஆனால் சாய் நாதன் வங்கிப் பணி, வயதான பெற்றவர்கள். சந்தீப்பின் வளர்ப்பு என்று எல்லாவற்றையும் யோசித்து விட்டு மறுத்து விட்டார்.
‘ஏம்மா குடும்பத்துக்காக பெண்தான் தியாகம் செய்யணுமா? உனக்கு வந்த வாய்ப்பை நீ விடாதே. கிளம்பு. கலக்கு என்றார்.

இது தியாகம்தான். இளமை அழிந்து உடல் தளர்ந்து நோய் அண்டிய பிறகு வந்திருக்கிறாள். ஆனால் மனசு நிறைய அவரை மட்டும் சுமந்து கொண்டு வாழ்ந்து, வெற்றிகளைச் சேர்த்துக் கொண்டு அவரிடமே திரும்பி விட்டாள்.

“அப்பா நானும் மித்ராவும் உங்களை மாதிரியே வாழ்வோம்பா.”

“மித்ராவையும், வசுவையும் கம்பேர் பண்ணாதே?”

“ஏம்பா?”

“சந்தீப் நான் சொன்னா உனக்கு சங்கடமா இருக்கும்.ஆனா மித்ரா உனக்கு ஏத்தவ இல்லை. அவகிட்ட எதோ தப்பு இருக்கற மாதிரி இருக்கு.இது உனக்குத் தெரிய வரப்போ நீ பயங்கரமா அடி படுவே.”

“உங்களுக்கு அவளைப் பிடிக்கலை.அதான் இப்படிச் சொல்றீங்க?”

“இல்லை நீ விரைவில் உணருவே” என்றார் சாய் நாதன்.

ஹரிணி அவரிடம் எல்லாவற்றையுமே சொல்லி விட்டாள்.அது விஷயமாகத்தான்

வசுமதி பெங்களூர் போயிருப்பாள் என்றது அவருடைய உள்ளுணர்வு.அது உண்மை என்று இரண்டு நாளில் தெரிந்தது.

சுக்காந்தான் டி.வி நியூஸ் பார்க்கும்போது கத்தினான்.

“ந்தா நம்ம மித்ரா மாதிரி இருக்கு?”

சந்தீப் பாய்ந்து ஓடி வந்தான்.

“பெங்களூரில் ஒரு ஹோட்டலில் ரெய்டில் பிடி பட்டதாகச் சொன்னது செய்திகள். உடனே சந்தீப் தன் நண்பனைத் தொடர்பு கொண்டு பேசிய போது அவன் மெல்ல, மெல்ல உண்மைகளைச் சொன்னான்.

நான் ஏற்கனவே சொன்னபோது நீ கேட்கலை. அவள் புரஃப்ஷனல் கால் கெர்ல். என்றான். இரண்டு கம்பெனிகளுக்கு அவள் ரெகுலராகச் செல்வாள். இரண்டு இட த்திலும் பணம் வாங்கிக் கொண்டு அவள் ஏமாற்றுவது தெரிந்து பொறி வைத்துப் பிடித்தது கம்பெனி.

ஏற்கனவே மித்ராவைப் பற்றிய சில தவறான விஷயங்கள் காதில் பட்டது வசுமதிக்கு. ஆனால் அது அவளுடைய சொந்த விஷயம். மேலும் கம்பெணியின் அஃபிஷியல் கால், கேர்ல் என்பது அவளுடைய தனிப்பட்ட விஷயம் என்று கண்டு கொள்ளாமல்தான் இருந்தாள் வசு.

ஆனால் நம் ரகசியங்கள் சில வெளியில் போகிறது என்று தமிழக கிளையின் பி.ஆர்.ஓ சொன்னது, சந்தீப் தன் மகன் என்று தெரிந்ததும் வசு விழித்துக் கொண்டாள். கீமோ முடிந்த அடுத்த நாள் காலையிலேயே பெங்களூர் கிளம்பு விட்டாள். அவள் கம்பெனியின் இந்தியக் கிளையின் நிர்வாக அலுவலகம் அங்குதான் இருந்தது.அங்கு உதவியாளர்களுடன் பேசி மித்ராவின் செயல் பாடுகளைக் கவனித்து அவள் தங்கள் கம்பெனியின் ரகசியங்களைக் கடத்துகிறாள் என்று கண்டு பிடித்து விட்டார்கள்.

மித்ரா ரெய்டில் கைது செய்யப் பட்டாள்.

சந்தீப் இடிந்து போனான். தன் ரூமுக்குள் பதுங்கியவன் இரண்டு நாள் வெளியில் வரவில்லை. தனக்குள் கூசி, குமுறி, குறுகிப் போனவனை யாரும் சமாதானம் செய்யவில்லை.அவனே தாடியும் மீசையுமாய் வெளியில் வந்தான்.

சாய்நாதன் முன் தலை குனிந்து “சாரிப்பா” என்றவனை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டார் சாய் நாதன்.

< பகுதி – 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031