• தொடர்
 • உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 19 | சுதா ரவி

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 19 | சுதா ரவி

1 week ago
59
 • தொடர்
 • உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 19 | சுதா ரவி

பில்லுமேட்டில்…….

ஊதக் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்க காட்டு மரங்கள் வேரோடு பிடுங்கி எறிந்து விடும் ஆக்ரோஷத்துடன் ஆடிக் கொண்டிருந்தன. அறையின் உள்ளே உத்ராவின் முன் நின்றிருந்த ஆர்ஜே குனிந்து அவள் பாதங்களில் சலங்கையை கட்டிக் கொண்டிருந்தான். அவன் தன் பாதங்களில் சலங்கையை கட்டுவதை பிடிக்காமல் முகத்தை அருவெறுப்பாக சுளித்துக் கொண்டு கண்களில் கண்ணீரோடு “ நீ என்ன சொன்னாலும் உன் முன்னாடி நான் ஆடவே மாட்டேன்” என்றாள் ஆங்காரத்துடன்.

சலங்கையை கட்டி முடித்து விட்டு எழுந்தவன் அவள் கண்களுடன் தன் கண்களை கலக்க விட்டு”உன்னை எப்படி ஆட வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்” என்றான்.

அதற்கு பதில் சொல்லாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். அதை பார்த்தவன் அவள் சற்றும் எதிர்பார்க்காத போது அவள் இடையை பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான். அவன் செயலில் அதிர்ச்சி அடைந்து “விடு என்னை, ப்ளீஸ் விடு என்னை..சீ.சீ…தொடாதே!ஏன் என்னை இப்படி

சித்ரவதை பண்ற” என்று அழ ஆரம்பித்தாள்.அவள் கூந்தலில் முகம் புதைத்துக் கொண்டு “நீ ஆடினா நான் உன்னை தொட மாட்டேன் பேபி.”

அழுது கொண்டே சரி “நான் ஆடுறேன்.ப்ளீஸ் என்னை தொடாம தள்ளி இரு….எவ்வளவு நேரம் வேணுனாலும் ஆடுறேன்.”

அவள் ஆட ஒப்புக் கொண்டதும் அவளை விட்டு விலகி கன்னத்தில் லேசாக தட்டிக் கொடுத்து “ குட்” என்று சொல்லி அவள் கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டு பாடலை ஒலிக்க விட்டான்.

     கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
     கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
    கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை 
     கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

உத்ரா ஆடுவதை பார்த்து மகுடியை கண்ட பாம்பு மயங்குவது போல் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவன் பாடலின் நடுவே எழுந்து வந்து…..”ஹேய் …ஹேய்…நிறுத்து…நிறுத்து….நான் அன்னைக்கு பார்த்த அந்த தாபம் உன் கண்களில் இல்லை இப்போ. அன்னைக்கு என்னை பார்த்து காதல் ரசம் சொட்ட சொட்ட ஆடினயே…அதே மாதிரி வேணும் பேபி..அதே மாதிரி வேணும்.”

அதுவரை தலைவிதியே என்று ஆடிக் கொண்டிருந்தவள் அவன் தடுத்து நிறுத்தி சொன்ன வார்த்தைகளில் ஆத்திரம் கொண்டு” உன்னை பார்த்து என்னால அப்படி ஆட முடியாது. மனசுக்கு பிடித்தவரை நினைத்து தேடி ஆடும் போது அந்த பாவங்கள் வரும்.நீ ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்கிற.”

அவள் சொன்னதை கேட்டதும்”அன்னைக்கு ஆடினியே………அப்போ என்னை உன் மனசுக்கு பிடிச்சு இருந்துதா?”

“எத்தனை வருஷம் ஆனாலும் உன்னை எனக்கு பிடிக்காது. என் மனசில் வேறொருத்தர் இருக்கார். என் உடம்பை வேணா நீ தீண்டலாம் ஆனா என் மனசை உன்னால நெருங்க கூட முடியாது.”

அவள் சொன்னதில் அதிர்ந்து அவள் குரல்வளையை பிடித்து நெருக்கி” என்னடி சொன்ன வேறொருத்தன் உன் மனசில இருக்கானா? என்று கேட்டு அப்படியே அவளை தூக்கி கீழே வீசி விட்டு அவள் முன்னே குனிந்து….” நீ இந்த ஜென்மத்தில் எனக்கு மட்டும் தான். இதை எவனாலயும் மாத்த முடியாது. உன்னுடைய கடைசி நாட்கள் வரை இங்கேயே இருந்து மண்ணோடு மண்ணாக தான் போவியே தவிர வேற யாரையும் உன்னை நெருங்க விட மாட்டேன்.”

“உன்னை பார்க்கிற ஒவ்வொரு நொடியும் எனக்கு இந்த உலகமே என் கைக்குள்ள வந்த அமைதி கிடைக்குது. உன்னை இங்கே கட்டி போட்டு வச்சு இருக்கிறதை நினைச்சு எனக்கு வலிக்குது டி. உன்னோட ஒவ்வொரு சொட்டு கண்ணீர் விழும் போதும் என் உடலில் உள்ள உதிரம் வழியிற மாதிரி இருக்கு. இந்த காதலை ஏத்துக்க உன்னால முடியலையா? இதை விட உன் மேல வேறோருத்தனால அன்பு வச்சிட முடியுமா ? சொல்லுடி சொல்லு” என்று மீண்டு அவளை பிடித்து உலுக்கி எடுத்தான்.

என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை என்பதை புரிந்து கொண்டு கண்களில் கண்ணீருடன் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

அவள் அழ ஆரம்பித்ததும் அவனிடம் இருந்த வேகம் குறைந்து முகத்தில் இறுக்கம் தளர்ந்தது. அவள் அருகில் வந்து அமர்ந்து…..”நாலு வருஷமா உன்னோட ஒரு வார்த்தைக்கு தாண்டி காத்திருக்கிறேன். நீ மட்டும் ம்ன்னு…ஒரு வார்த்தை சொல்லு. அடுத்த நிமிஷம் இறந்து போனதா காண்பிச்ச உன்னை உயிரோட என் மனைவியா இந்த உலகத்து முன்னாடி நிறுத்துறேன். நான் நினைச்சா எத்தனை பெண்களை வேணுமானாலும்

கட்டிக்கலாம். ஆனா என் மனசு உன்னோட ஒரு வார்த்தைக்காக தவம் இருக்கு……….

கனகசபை தெரு லிஸ்டர் மருத்துவமனை அருகே இருந்த அந்த வீட்டின் மாடி அறையில் மூன்று பேர் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் கதவு மெல்ல தட்டப்பட்டது. ஆதி சென்று கதவை திறந்தான். வெளியில் நின்றிருந்த கார்த்தியை கண்டதும் நகர்ந்து உள்ளே வருவதற்கு வழியை விட்டான்.

கார்த்தியின் முகமோ தீவிர யோசனையுடனும் இறுக்கத்துடனும் இருந்தது. அவன் முகத்தை பார்த்த மற்ற மூவரும் அவனே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தனர். தலையை கைகளில் தாங்கி குனிந்து அமர்ந்து விட்டான். மனமோ அலைகடலென கொந்தளித்துக் கொண்டிருந்தது. ‘அவளின் நிலை என்ன ? எந்த நிலையில் இருக்கிறாள்? அவளை உயிராக என் நெஞ்சில் தாங்குவேன் என்று சொன்ன என்னால் அவள் உயிருடன் இருப்பதை கண்டறிய முடியாமல் போனது எப்படி? அவளை இனி எப்படி எதிர்கொள்வேன்? உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ?’ என்ற எண்ணம் வந்த போது நான்கு வருடங்களாக மனதில் சுமந்த பாரம் மீண்டும் தலைக்கு ஏறியது . இத்தனை வருடம் அவள் இல்லை என்கிற நினைவில் வாழ்ந்தவனுக்கு ஒரு சிறிய நூலிழை அளவிற்கு நம்பிக்கையை கொடுத்தது ஹரியின் வாக்குமூலம். ஆனால் அவள் இல்லாமல் போய் இருப்பதற்கும் சாத்தியகூறுகள் இருப்பதாக எண்ணம் தோன்றிய நிமிடம் உடலெல்லாம் பதறி எழுந்து நின்று விட்டான். அவனது மன உளைச்சலை பார்த்துக் கொண்டிருந்த ஆதி மெல்ல அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான். அதன் பின் சற்று நிதானத்துக்கு வந்த கார்த்தி மற்றவர்களை பார்த்து மெல்ல தலை அசைத்து உள்ளறைக்கு எழுந்து சென்றான்.

அனைவரும் அங்கே இருந்த மற்றொரு அறைக்குள் சென்றனர். அங்கே நடுவில் ஒரு மேஜை போட்டு அதில் சிதம்பரத்தின் மேப் விரித்து வைக்கப் பட்டிருந்தது. அதன் அருகே சென்று நின்ற கார்த்தி ஆதியை பார்த்து…..” அவனுங்க சந்திக்க போகிற இடம் தெரிஞ்சு போச்சு” என்றான்.

அதை கேட்ட சேது” எங்கே கார்த்தி…….எங்கே சந்திக்க போறாங்க?”

அவனை நிமிர்ந்து பார்த்தவன்” சாரி சேது, பிரபா எனக்கிருந்த யோசனையில் உங்களை கவனிக்கவே இல்லை.அவனுங்க புவனகிரியில் சந்திக்கிறாங்க . நாம அவங்க என்ன பேசுறாங்க அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். “

“ கார்த்தி உத்ராவை பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” என்றான் ஆதி.

அங்கிருந்த வரைபடத்தில் கண்களை ஒட்டிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து மூவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த உத்ராவின் படத்தை எடுத்து மேஜையின் மீது போட்டான். அதை பார்த்த மூவரும் பலத்த அதிர்ச்சியை காட்டினார்கள். “ ஹரி சொன்னது உண்மை தானா, அவன் தான் கடத்தி வச்சு இருக்கானா?”என்று பதட்டத்துடன் வினவினான் சேது.

“வேற ஏதாவது ஆதாரம் கிடைச்சுதா கார்த்தி” என்று பதைபதைப்புடன் கேட்டான் ஆதி.

“அப்போ அன்னைக்கு நீ பார்த்த உடம்பு யாரோடது? இப்போ அவன் அவங்களை உயிரோட வச்சு இருப்பானா?”என்று பல சந்தேகங்களை கேட்டான் பிரபாகர்.

“உங்களை மாதிரி என் மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் சுத்துது ஆனா ஒரு கேள்விக் கூட என் கிட்ட பதில் இல்ல. இதை தவிர அங்கே வேற எதுவும் கிடைக்கல. ஆனா என் மனசுக்குள்ள ஒரு சின்ன நம்பிக்கை அவ உயிரோட தான் இருப்பாள் என்று..”

சிறிது நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் அனைவரும் அமைதியாய் இருக்க, கிடைத்த அந்த நேரத்திற்குள் தன் மனதை சீர் செய்து கொண்டு தான் ஆர்ஜேவின் வீட்டில் கேட்டவைகளை அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தான். அடுத்த நாள் காலை பத்து மணி அளவில் இரு தராப்பினரும் புவனகிரியில் உள்ள ஆர்ஜேவின் குடௌனில் சந்திக்கப் போவதும் அங்கு சரக்கு கை மாறினாலும் மாறலாம் என்றும் தெரிவித்தான்.

“நாம எப்படியாவது அந்த குடௌனுக்குள்ள நுழைஞ்சாகனும் அப்போ தான் அங்கே நடப்பவைகளை கண்காணிக்க முடியும் உடனேவும் செயல்பட வசதியா இருக்கும்” என்றான் பிரபாகர்.

அதை கேட்ட ஆதி “ அது அவ்வளவு சுலபம் இல்லை. ஏகப்பட்ட காவல் இருக்கும். சிதம்பரத்தின் மிகப் பெரிய தலைகள் ரெண்டும் சந்திக்குதுன்னா பயங்கர சோதனை இருக்கும்.”

“கண்டிப்பா நாம வேற வழியை தான் யோசிக்கணும். புவனகிரி இங்கே இருந்து பதிமூணு நிமிஷத்தில் போய்டலாம். ஆனா அங்கே எந்த இடத்தில் ஆர்ஜேவின் குடௌன் இருக்குன்னு நமக்கு தெரியாது அதனால நாம தாண்டவத்தோட வீட்டை இன்னைக்கு இரவில் இருந்தே கண்காணிக்க தொடங்கணும்.”

“ஆமாம் கார்த்தி நீ சொல்றபடி தாண்டவம் வீட்டை கண்காணிச்சா எப்படியும் அவங்களை பின் தொடர்ந்து பிடிச்சிடலாம்.”

“ஆனா உள்ளே என்ன நடக்குது என்பதை எப்படி தெரிஞ்சுக்கிறது. நம்ம ஆளுங்களில் யாராவது ஒருத்தர் உள்ளே போகணும்”என்றான் சேது.

அதன் பின்னர் ஒரு மணி நேரம் பல வித கோணங்களில் அலசி ஆராய்ந்து தீர்க்கமான ஒரு திட்டத்தை வகுத்து அதன் படி செயல்பட முடிவு செய்தனர். அடுத்து அடுத்து என்ன என்று ஒருவருக்கொருவர் தாங்கள் செயல்பட வேண்டிய முறைகளையும் தீர்மானித்துக் கொண்ட பின் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாயினர்.

“ஒரு நிமிஷம் நான் மினிஸ்டர் கிட்ட பேசிடுறேன் .நீங்களும் இருந்து கேட்டுட்டு போங்க. நான் இங்கே வந்ததில் இருந்து எந்த வித தகவலும் அவருக்கு கொடுக்கல” என்றான் கார்த்தி.

தன் அலைபேசியில் இருந்து மத்திய மந்திரி ராகேஷ் ஷர்மாவிற்கு அழைத்தான்…….” ஜெய்ஹிந்த்………..ஆபரேஷன் நடராஜா”

“ஜெய்ஹிந்த்..ஆபரேஷன் நட்ராஜா..போலோ கார்த்தி கப் ஹோ ரஹாஹே ?”( சொல்லு கார்த்தி எப்போ நடக்க போகுது )

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 | அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 | அத்தியாயம் – 17 | அத்தியாயம் – 18 | அத்தியாயம் – 19 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30