விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!

விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10ம் தேதி) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பா.ஜ.க. ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.

இதை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் விகடன் இணையதளம் (கடந்த மாதம் 15 ஆம் தேதி) முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பும் வெளியானது. எனினும் இதுகுறித்துப் பேசிய விகடன் நிறுவனம், ‘நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக விகடன் தரப்பு சென்னை ஐகோர்ட்டை நாடியது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கு அவர் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!