சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

 சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முரசு கொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், பொங்கல் திருவிழாவின்போது ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன. தொடக்க விழாவை அடுத்து, ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.

இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.

இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...