அனுபவம் புதுமை/சித்திராலயா கோபு

 அனுபவம் புதுமை/சித்திராலயா கோபு

சித்ராலயா கோபு என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார். இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லைகலாட்டா கல்யாணம்உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார்,

இவரின் பிறந்தநாள் நேற்று
இவர் 30-06-1931 அன்று பிறந்தவர்

நாம் இக்கட்டுரையில் வாசிக்கப் போகும் நகைச்சுவை அரசருக்கு அறிமுகமே தேவையில்லை. அனுதினமும் நாம் சுமக்கும் வாசனையைப் போல அவரின் நகைச்சுவைத் திறன் 92 வயதிலும் ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது.அந்த நகைச்சுவை மின்னலைப் பிடித்து மின்கைத்தடியின் பொங்கல் மலருக்காக

ஒளிப்பாய்ச்சியத்தை இங்கே உங்களுக்கு பதிவிடுவதில் பெருமை கொள்கிறோம்

அனுபவம் புதுமை

இயற்கையின் எழில் எப்படி என்றுமே குன்றுவதில்லையோ அதைப்போல் அனுபவத்திற்கும் எழில் குறைவது இல்லை அப்படி அனுபவம் புதுமையாக நடந்த ஒரு நிகழ்வைத்தான் பொங்கல் மலருக்காக இங்குத் தரப் போகிறோம் மனிதர்களின் வாழ்வில் ஒன்றிரண்டு நெகிழ்வுகள் ஒன்றிரண்டு பகிர்வுகள் நம்மை வசப்படுத்தும் சிரிப்பு கடவுள் மனிதனுக்கு அளித்த வரம் தானும் சிரித்து நம்மைச் சேர்ந்தவர்களையும் புன்னகைக்க வைப்பது வெகு சிலரே

செங்கல்பட்டில் பிறந்து சென்னையில் ஜாகை தொடர்ந்து தற்போது திருவான்மையூரில் வசிக்கும் பேரன்பேத்திகளுடன் கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டு 60படங்களுக்கு கதை வசனம் 27 படங்களை இயக்கியவரின் இல்லத்திற்கு உத்தரவின்றி உள்ளே வரலாம் என்றார் அன்போடு எங்கள் குழுவை.

குதூகலமான புன்னகை முகம் என்ன பண்ணப்போறீங்க ? என்ன பேசணும் என்று ஆர்வமாய் எங்கள் முன்பு அமர்ந்தார் 92வயது இளைஞர். தமிழ் திரையுலகில் புதிய அலைகளைத் தோற்றுவித்த சித்ராலயா நிறுவனத்தின் படங்கள் என்றால் ஒன்று சோகத்தை பிழிந்து கொடுக்கும் குடும்பக் கதைகள், முக்கோணக் காதல் கதைகள் இதில் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதற்குள் விலா நோக வைக்கும் சிரிப்பு நிச்சயம்.

அதற்கு சொந்தக்காரர் தான் சித்திராலயா கோபு அவர்கள்.

வந்திருந்த மின்கைத்தடி குழுமத்துடன் சிறு அறிமுகம் லதாசரவணன், பாலகணேஷ்,இன்பா,லாரன்ஸ் நாங்கள் நகைச்சுவை முத்துக்களைச் சேகரிக்க தயாரானோம்.

பால்யம் என்பது எப்போதுமே தேன்துளிகளைப் போல நமக்கு இனிமைதரும். அதிலும் வாழ்வின் ஒரு கட்டத்தில் அத்தேனின் ருசியை அசைபோடுவது மகிழ்வே உங்களின் பால்யம் எப்படியிருந்தது ?

எல்லாரையும் போலத்தான் பிறந்தேன், வளர்ந்தேன், ஆத்தூர் சீனிவாசன், கடுகு, மிளகுன்னு அஞ்சரைப் பெட்டி சமாச்சாரங்களையெல்லாம் தன் புனைப்பெயரா எடுத்துகிட்டு எழுதிவந்த அகஸ்டியன், தென்னாட்டு சாந்தாராம்ன்னு பேரு வாங்கின ஸ்ரீதர் நாங்க எல்லாருமே ஐந்தாம் வகுப்பில் இருந்து பள்ளி மாணவர்கள்.

ஆறாம்வகுப்பில் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அத்தனை நாடகங்கள் எல்லாவற்றிற்கும் ஸ்ரீதரும் நானும் கதையும், காமெடிகளையும் எழுதுவோம் அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஸ்கூல் படிக்கும் போது பையன் இப்படியே டிராமான்னு சினிமான்னு போயிடுவானோன்னு பயந்து என்னை கொண்டு போய் காரைக்குடியில இண்டர்மீடியட் சேர்த்துட்டாங்க. பர்ஸ்ட் எனக்கு போக விருப்பம் இல்லை, நண்பர்களை விட்டு, ஆனா கிரிக்கெட் தான் எனக்கு ரொம்ப ஆர்வமாயிருந்தது. காரைக்குடியில் என்னோட பைவுலிங் ஸ்கில்லில் நிறைய வாய்ப்புகளோட இண்டர்மீடியட் சீட் கிடைச்சது.

படிச்சோங்கிறதைவிட நல்லா விளையாடினேன்.

உங்கள் நண்பர்களை விட்டு பிரிந்த நீங்கள் அவர்களை எப்படி தொடர்ப்பு கொண்டீர்கள் ?

இப்போது மாதிரி அப்போ இணையவழி தொடர்புகள் இல்லை. எல்லாம் விரலைத்தாண்டி மனதைத் தொட்ட நிமிடங்கள். எங்களுடைய நட்பு கடிதத்தில் தொடர்ந்தது. நடக்கிற விவரங்கள் எல்லாத்தையும் நான் கடிதத்தில் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

ஸ்ரீதர் ஸார் எளிதில் எதையும் பாராட்ட மாட்டார் ஆனால் உங்களை நீங்கள் எழுதிய கடிதத்தை வைத்து ரொம்பவும் சிலாகித்தார்ன்னு கேள்விப்பட்டிருக்கோம் அதுபற்றி ?

நான் காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை நேரு எங்கள் கல்லூரி விழாவிற்கு வந்திருந்தார். எனக்கு நேருன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அப்போ உள்ள நெருக்கடியில் அவரை அருகில் போய் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கலை, ஆனா அவர் வந்ததில் இருந்து நிகழ்வு முடிந்து செல்லும் வரையில் நான் நேருவை பற்றி வர்ணித்து எழுதியிருந்த கடிதத்தை படித்த ஸ்ரீதர் ரொம்பவே வெகுவாகப் பாராட்டினார்.

இன்னொன்னு நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணபரிசு, போலீஸ்காரன் மகள்ன்னு எடுத்திட்டு இருந்த சமயம் எனக்கு ஒரு கமர்ஷியல்ல ஸ்ரீதரை திருப்பனுன் தோணுச்சி இதே பீச்சில் காரில அமர்ந்திட்டு அவர்கிட்டே அதைப் பற்றி விவாதித்தோம் அப்போ உருவான கதைதான் காதலிக்க நேரமில்லை. ரொம்பவும் அழுத்தமான படங்களைத் தந்துட்டு இப்போ காமெடி மாதிரி இலேசான படங்களை எடுத்தா போகுமான்னு அவருக்கு ஒரு சந்தேகம்.

கொஞ்சம் பேசி நிறைய தயக்கக் காபிகளைப் பருகியபிறகு தைரியமாக முடிவுக்கு வந்தார். கதைப்பற்றிய விவாதங்கள் காரிலேயே பேசிகிட்டு இருந்தப்போ நான் சொன்ன ஒரு பாயிண்ட் அவருக்கு ரொம்பவே பிடிச்சிப்போச்சு, அப்போ ஸ்ரீதரின் பாராட்டுதான் என்னோட பெயரும் காதலிக்க நேரமில்லை டைட்டில்ல கதை வசனம் ஸ்ரீதர்-கோபுன்னு போட்டார். அதுவும் ரொம்ப பெரிய பாராட்டாத்தான் நினைக்கிறேன்.

பள்ளிப்படிப்பு நடுவில் காரைக்குடியில் படிப்பு இதன் மத்தியில் எப்போது மீண்டும் ஸ்ரீதர் சாரைச் சந்தித்தீர்கள் ?

அது ஒரு எதிர்பாராத விருந்தைப் போல, என்னோட படிப்பு முடிந்து கல்யாணம் நடந்த தருணம். நான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன் தீடீர்னு ஒரு நாள் ஸ்ரீதர் என்னை சந்திக்க வந்திருந்தார். பியட் காரில் தெருவை அடைத்துக்கொண்டு, எனக்குள் சந்தோஷம். தன்னைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு என்னோட வந்துவிடு ஒரு ரவுண்டு போயிட்டு வரலான்னு சொன்னார். நானும் கிளம்பினார். சூப்பர் யாரு காரு இது ?

ஏன் என்னதுதான் ?

எப்போ வாங்கினே ?

நேத்து….

நீயா…ஓட்டிவந்தே ? எப்போ கத்துகிட்டே ?

அதுவும் நேத்துதான் என்று என்னை வாயடைக்க வைத்தான் சர்ரென்று வேகமெடுத்து ஸ்ரீதருக்கு பிடித்தமான மதுராந்தகம் வரை பயணம்.

கோபு பேசாம நீயும் என்கூட சினிமாவுக்கு வந்திடேன்.

இப்போதான் எனக்கு ஒருத்தன் பொண்ணு கொடுத்திருக்கான் கல்யாணம் ஆகியிருக்கு அதுக்குள்ளே வேலையை விடச்சொல்றியா ?

அவன் எவ்வளோ தர்றான் ?

இரண்டு நூறுகள்

நான் அதைவிட அதிகமாத்தர்றேன். என்னோட கனவுகளுக்கு உன் கண்களும் தேவை என்றான்.

நாம வாயை வைச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம். காரின் ஸ்பீடு முள்ளைப் பார்த்து இதென்ன 100ன்னு போட்டுயிருக்கு அவ்வளவு வேகமாக போகுமான்னேன்?

எனக்கும் தெரியலை போகலான்னு வண்டியை 100க்கு அழுத்தினான் அப்போ ஆரம்பித்த ஓட்டம் வெற்றி இலக்கு தொட்டது.

நகைச்சுவைகள் ஒவ்வொரு கட்டத்திலேயும் ஒவ்வொரு ரசனைகளைத் தொட்டது. ஆழமான கருத்துகள், சிரிப்புடனே சிந்திக்க வைத்தது, அதன் பிறகு உருவகேலி, அடிவாங்குவது எல்லாம் கடந்து இப்போதும் கிளாஸிக் நகைச்சுவைன்னா ? முதல்ல டிவியிலும் நினைவிலும் வருவது உங்களுடைய நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் தான் ? அது எப்படி உருவாச்சு ?

கதைகள் மட்டுமில்லை நகைச்சுவைகள் கூட நமக்குள்ளே இருந்துதான் எடுக்கப்படுகிறது. அதுக்கு கொஞ்சம் ரசனை மட்டும் போதும். அப்படித்தான் இவையெல்லாம் உருவகமாச்சு அதை வெளிக்கொண்டு வந்த நடிகர்களின் உடல் மொழியும், அசைவும் உயிர்கொடுத்தது. ரசிகர்கள் கொண்டாடினாங்க.

உதாரணமாக கல்யாணபரிசு தங்கவேலு…..?காதலிக்க நேரமில்லை ஒஹோ புரெக்ஷன்ஸ் ?

பட்டி தொட்டியெல்லாம் ஓடி திரைப்பட வரலாற்றில் ஒரு படத்தின நகைச்சுவை வசனங்கள் மட்டும் ரெக்கார்டு செய்து விற்பனை செய்யப்பட்டதும் அதுவே முதல்முறை.

அந்தப் படத்தில் தங்கவேலு மன்னார் அண்ட் கம்பெனி மானேஜர், எழுத்தாளர் பைரவன் என்று பலவித கெட்அப் களில் டூப் மாஸ்டராக வருவார்,அந்தப் பாத்திரம் நிஜத்தில் வேறு யாருமில்லை நான்தான் என்றார் குறும்புச்சிரிப்புடன்.

எனக்கும் ஸ்ரீதருக்கும் ஒரு நண்பர் அவர் எப்போதுமே சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பொய் சொல்லுவார். அந்த கதாபாத்திரத்தை வைத்துதான் டெவலப் பண்ணினோம். நாடகத்தில் இருந்து வந்தது சினிமா. அதை மக்கள் ரசித்தார்கள். முக்கியமா என்ன எழுதினாலும் அதை வெளிப்படுத்தும் விதம். மனோரமா, நாகேஷ். தங்கவேலு,பாலையா எல்லாருமே எக்ஸ்டிரானரி அவங்க நிறைய மேடைகளைப் பார்த்தவங்க. உண்மையா சொல்லணுன்னா நாங்க இரண்டு மூணு மொழியில் படம் பண்ணினோம். நம்ம நகைச்சுவை நடிகர்கள் கிட்டே இருக்கிறே அந்த பாவங்களும், நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதும் மற்ற காமெடியன்ஸ்கிட்டே இல்லைன்னே சொல்லலாம். அதுவும் இந்த வெற்றிக்கு காரணம்.

அந்த படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவிக்கு நான் தான் தமிழ் சொல்லிக் கொடுத்தேன். அவருக்கு என் பெயர் உச்சரிக்க வராது அதற்கு பதில் ஜடகோபால்ன்னு தான் கூப்பிடுவார். 50வருஷம் கழித்து என் சதாபிஷேக விழாவில் அவரைப் பார்த்தேன் மறக்காமல் எப்படி இருக்கீங்கன்னு ஜடகோபால்ன்னு மறக்காமல் கேட்டு சிரிக்க வைத்தார் சரோஜாதேவி.

செட்லே ஒரு பிரச்சனைன்னா கோபு சாரைத் தான் சரி செய்ய அனுப்புவாங்க ? அவரால் அந்த சிக்கலைத் தீர்க்க முடியுன்னு அப்படி ஏதாவது ஒரு அனுபவத்தைப் பகிருங்களேன்.?

குறிப்பிட்டு சொல்லணுன்னா கதாநாயகியா இருந்த சச்சுவை நகைச்சுவை நடிகையா களம் இறக்கியது. அந்த கதாபாத்திரத்திற்கு அவங்கதான் பொருத்தமின்னு சொல்லிட்டார் ஸ்ரீதர் அவங்க சைடுலே கடும் எதிர்ப்பு. என்ன செய்ய ? உங்களுக்கு ஒரு பாட்டு இருக்கு நீங்கதான் மூன்றாவது கதாநாயகின்னு எல்லா தகிடுதத்தோம் பண்ணி அவங்க பாட்டியை திருப்தி செய்து அவங்களையும் நடிக்க வைச்சோம். இன்பேக்ட் சொன்னதற்காக புதுசா சச்சுவுக்கு ஒரு பாட்டே பதிவும் செய்தோம்.

இந்தமாதிரி நிறைய நிகழ்வுகள் செட்டில் நடக்கும். எதையும் சட்டுன்னு மண்டையிலே ஏத்திக்காம என்ன செய்யலான்னு மனதிலே கணக்குப்போட்டா எந்த சூழ்நிலையும் யாராலையும் சமாளிக்க முடியும் அப்படிதான் நான் இருந்தேன்.நான் படைத்த கதாபாத்திரங்களும் இருந்தது.

உங்களின் ஆதர்ச கதாநாயகர்கள் யார் ?

யாரை விட்டு யாரை சொல்வது? அப்போதைய கதாநாயகர்கள் எல்லாமே பழக இலகுவானவர்கள். என்னுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகனாக இருந்தாலும் அவருக்கும் இரண்டு டயலாக்குகள் வையுங்கள் அவரையும் ரசிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று சிவாஜி சொல்லுவார். முத்துராமன், ஜெய்சங்கர் இவங்களும் அப்படித்தான்.

சார் காசேதான் கடவுளடா படத்தில் நடிக்க தேங்காய் சீனிவாசனைப் போட்டதால் நாகேஷ் உங்களின் மேல் கோபமாக இருந்தாரா ?

தனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் மிஸ்ஸாகுதேன்னு ஒரு நடிகனாக அவருக்கு என்மேல வருத்தம் இருந்தது. ஆனா ஏவிஎம்மில் ஒரு புதிய ஆள் அந்த இடத்திற்கு இருந்தா அதுவும் சென்னைத் தமிழ் பேசுறவங்களா இருந்தா நல்லதுன்னு பிரியப்பட்டாங்க அப்போதான் எனக்கு தேங்காய் நினைவுக்கு வந்தார். எதிர்பார்த்தா மாதிரியே சிறப்பாக வந்தது. ஸ்பெஷலி அந்த ஜம்புலிங்கமே ஜடாதாரான்ங்கிற பாட்டு….இப்போதும் டிவியில் போடும்போது உங்க படம் போடறாங்க நாங்க பார்க்கிறோன்னு போன்லே கூப்பிட்டு யாராவது சொல்லுவாங்க அது ரொம்பவும் சந்தோஷமா இருக்கும்.

தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட்ன்னு பேர் எடுத்தவர் ஜெய்சங்கர். கோட்டு சூட்டில் அத்தனை விரைப்பாய் இருந்தவர் வீட்டுக்கு வீடு படத்தில் தன் பாடி லேங்வேஜை மாற்றியது ?

இயக்குநர்களின் கதாநாயகன் யாருன்னு அது ஜெய்தான். அத்தனை அற்புதமான மனிதர். வீட்டுக்கு வீடு அவருக்கு காமெடியில் நல்ல ஸ்கோப் இருந்தது, அப்பாவுக்கும் மனைவிக்கும் பயந்த மகனா ? தோழிக்கு சொத்து கிடைக்கணுன்னு நிர்மலாவோட கணவனா நடிக்கிறபோது அநியாயத்துப் பயப்படறதும் தன் கனமாக குரலை குழைச்சி பேசறதுன்னும் அதுக்குபிறகு அத்தையா மாமியா படமும் நல்லாப்போச்சு.

படப்பிடிப்பில் ஏற்பட்ட சுவையான நிகழ்வுகள் ஒன்றிரண்டு ?
வாஷிங்டனில் திருமணம் சாவியின் கதை நான் திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தது மட்டுமில்லாம அதில் நடிக்கவும் செய்தேன் என்ன ரோல் தெரியுமா ? அம்மாஞ்சி சாஸ்த்திரி வேஷம்.

கதையில அமெரிக்கா ஒயிட் ஹவுஸ் முன்னால ஷூட்டிங். அங்க வந்து நின்று பேசினவங்கள்லே ஒரு வெள்ளைக்கார பொண்ணு வந்து என் குடுமியைத் தொட்டுப் பார்த்துட்டு, ஒய் ஆர் யூ வேரிங் திஸ்-ன்னு என்று ஒரு வெள்ளைக்கார பொம்பளை கேட்டாங்க?

திஸ் இஸ் அவர் நேச்சுரல் ஹெல்மெட்டுன்னு சொன்னேன். எல்லாரும் சிரிச்சிட்டாங்க.

தேனிலவு பட அனுபவம் எப்படி?

தேனைப் போலவேதான் அத்தனை சுவையான அனுபவங்களைக் கொண்டு இருந்தது தேனிலவு படம்.ஒவ்வொரு படத்திற்குள்ளும் கோடிக்கணக்கான நிகழ்வுகள். அப்போ ஷூட் எடுத்தது ஒரு குக்கிராமம் எடுத்த காட்சிகளை ரொம்ப தூரம் நடந்து ஒரு படாவதியான தியேட்டரில் போட்டுப் பார்ப்போம். இப்போபோல போக்குவரத்து வசதிகள் எல்லாம் இல்லாத போனதால நாங்க சில மைல்கள் நடந்தே போவோம். படப்பெட்டி அத்தனை வெயிட்டா இருக்கும். ஆனா அப்போதை பயங்கரமான வில்லன் மிரட்டிக்கிட்டு இருந்த நம்பியார் எந்த பந்தாவும் இல்லாமல் அதை அசால்டாக தூக்கி கொண்டு வருவார். ஈகோ இல்லாத அருமையான மனிதர் அந்த கஷ்டமெல்லாம் தேனிலவு ரிலீசானவுடனேயே சந்தோஷமா மாறிடுச்சி.

திகில்அழகின்னு சாந்திநிலையத்தில் நாகேஷ் விஜயலலிதாவைக் கூப்பிடுவார் அந்தபெயர் காரணம் ?

அது கர்நாடகாவில் நடந்தது காதலிக்க நேரமில்லை வெற்றியைக் கொண்டாட அந்தக் குழுவினர்களோடு நாங்க எல்லாரும் போயிருந்தோம், காதலிக்க நேரமில்லை குழு வந்திருக்கிறதுன்னு தெரிந்ததும் ரசிகர்கள் அந்த இடத்தை குழும ஆரம்பித்தார்கள். விழா ஏற்பாட்டாளர்கள் எத்தனையோ பேசியும் அவர்கள் ஆர்வமிகுதியில் கலையாமல் இருக்க, கூடவே ரகளையும் ஆகிவிட்டது. ஆண்கள் பெண்கள் என ஒட்டுமொத்த குழு காஞ்சனா, சஞ்சு, ராஜஸ்ரீ எல்லாரும் பயந்து போக ஆண்கள் காவலாக நின்றோம். அப்போது ஒரு மேஜைக்கு அருகில் இருளில் ஒளிந்து கொண்ட ராஜஸ்ரீயைக் கண்டதும், திகில் அழகி என்று நாகேஷ் அவரை கேலி செய்தார். அந்த பெயர் சாந்தி நிலையத்தில் உலாவந்தது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...