சே குவேராவின் மகள் அலெய்டாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு
“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்றவர், “நான் ஒரு கொரில்லா போராளி. அப்படி அழைப்பதையே விரும்புகின்றேன்” என்று கூறிய புரட்சியாளர்சேகுவேரா. உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன்
சேகுவேரா மருத்துவராக இருந்து ஒரு போராளியாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிசப் புரட்சியாளரானார்.
உலக அளவில் இன்று வரை அதிக மக்களால் கொண்டாட்டப்பட்டு வருபவர் புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேரா. அர்ஜெண்டினாவில் பிறந்த இவர், கியூபாவில் ஏற்பட்ட புரட்சியின் முகமாக அறியப்படுகிறார். முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான கடும் போராட்டங்களை முன்னெடுத்த சேகுவேரா, கியூபாவின் தொழில்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார். சேகுவேராவின் மறைவிற்குப் பிறகும், உலக நாடுகளில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் அவரது கொள்கைகளும், கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தியாவிலும் சேகுவேராவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில் சேகுவேரா மகள் அலைடா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக கியூபா ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சேகுவேராவின் மகள் பெயர் அலெய்டா குவேரா மார்ச். எர்னஸ்டோ சே குவேரா மற்றும் அவரது மனைவி அலெய்டா மார்ச் ஆயோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவர் இவர்.குவேரா என்பது தந்தை பவி குடும்ப் பெயர் மார்ச் என்பது தாய் வழி குடும்பப் பெயர்.
காங்கோவில் புரட்சி நடத்துவதற்காக சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறியபோது அலெய்டாவுக்கு நான்கு வயதுதான். பொலிவியாவில் சேகுவேரா படுகொலை செய்யப்பட்டபோது அலெயடாவுக்கு ஏழு வயது. எனினும் தந்தையைப் பற்றிய இனிமையான நினைவுகளை அலெய்டா நினைவுகூர்ந்தார்.
அலெய்டா குவேரா மார்ச் குழந்தை மருத்துவத்துறையில் நிபுணர். கியூபத் தலைநகர் ஹவானாவில் உள்ள வில்லியம் சோலார் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். ஆப்பிரிக்காவின் அங்கோலா, மத்திய அமெரிக்காவின் ஈக்குவடார், நிகரகுவா ஆகிய நாடுகளில் நெருக்கடியான காலகட்டங்களில் மருத்துவக் குழுவிற்குத் தலைமையேற்றுப் பணியாற்றியிருக்கிறார்.
அங்கோலாவில் கியூபா மருத்துவக்குழுவுடன் சென்று நீண்ட காலம் பணியாற்றியதை நினைவுகூர்கிறார் அலெய்டா.
“பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. சில சமயங்களில் என்னால் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் நான் துக்கமும் துயரமும் என்னுடன் என்றென்றும் இருக்கும். அங்குள்ள இனவெறி, மனித சுரண்டல், மனித உயிர்கள் மீதான அலட்சியம் ஆகியவற்றுக்கு எதிராக என்னை செயல்படத் தூண்டியது” என்றார்.
அலெய்டா சாவேஸ், வெனிலா மற்றும் புதிய லத்தீன் அமெரிக்கா என்கிற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
தற்போது அலெய்டா குவேரா மார்ச், கியூபாவில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக இரண்டு இல்லங்களையும் அகதிக் குழந்தைகளுக்காக இரண்ட இல்லங்களையும் நடத்துகிற பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வருகிறார். கிழக்கு கியூபாவில் உள்ள ரியோ காடோவைச் சுற்றியுள்ள அடிக்கடி வெள்ளம் ஏற்படுகின்ற பகுதிகளில் மருத்துவ உதவிகளையும் செய்துவருகிறார்.
ஒரு புரட்சியாளரின் மகளாகத் தொடர்ந்து கியூபா புரட்சிகர சக்திகளுக்கு உதவுவதிலும் மருத்துவ சர்வதேசியத்தை முன்னெடுப்பதிலும் களச்செயற்பாட்டாளராக அலெய்டா சேகுவேரா மார்ச் திகழ்வதில் ஆச்சரியமில்லை. காரணம் உண்மையான புரட்சியாளரின் வாரிசு அப்படித்தானே இருப்பார்.