வரலாற்றில் இன்று – 27.01.2021 சர்வதேச படுகொலை நினைவு தினம்
இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.
சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது.
இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.
சாமுவேல் கோம்பர்ஸ்
அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் 1850ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.
இவர் 1864ஆம் ஆண்டு நியூயார்க் நகர சுருட்டுத் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்ந்தார். 1881ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை உருவாக்க உதவியாக இருந்தார்.
1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (American Federation of Labor) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படவும் பாடுபட்டார். 1919ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆலோசகராக கலந்துகொண்டார்.
சமூக மக்கள் அனைவருக்கும் இயற்கை வளங்களும், வாய்ப்புகளும் சமமானவை என்ற பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருந்த சாமுவேல் கோம்பர்ஸ் 1924ஆம் ஆண்டு மறைந்தார்.
ரா.வெங்கட்ராமன் இன்று நினைவு தினம்..!!
சுதந்திர இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ரா.வெங்கட்ராமன் அவர்கள் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.
இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ (1942) ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். பின் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கினார்.
மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டார். 1982ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார்.
1984ஆம் ஆண்டு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987ஆம் ஆண்டு நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1992ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.
உண்மையான தேசபக்தரும், வழக்கறிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ரா.வெங்கட்ராமன் அவர்கள் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1756ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இசைமேதை மொஸார்ட், ஆஸ்திரியாவில் பிறந்தார்.
1880ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.