வரலாற்றில் இன்று – 30.10.2020 சிக்கன தினம்

“சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சிக்கன தினம் அக்டோபர் மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பசும்பொன் தேவர்

சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933ஆம் ஆண்டு நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.

காங்கிரஸில் இருந்து 1948ஆம் ஆண்டு விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1963ஆம் ஆண்டு தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.

ஹோமி ஜஹாங்கீர் பாபா

இந்திய அணுவியல் துறையின் தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ஆம் ஆண்டு மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது (1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுக்கூறப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967ஆம் ஆண்டு முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) எனப் பெயரிடப்பட்டது.

அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ஆம் ஆண்டு மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஹோமி ஜஹாங்கீர் பாபா 1966ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1883ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தயானந்த சரசுவதி மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!