வரலாற்றில் இன்று – 04.10.2020 உலக விலங்குகள் தினம்

 வரலாற்றில் இன்று – 04.10.2020 உலக விலங்குகள் தினம்

விலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. உலகில் பலவித விலங்குகள், நமக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், இத்தினம் உருவாக்கப்பட்டது.

உலக விண்வெளி வாரம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்காக தங்கள் பங்களிப்பை கொடுத்து வரும் உலக விண்வெளி வார கழக வாரியத்தின் பணிப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு ஐ.நா பொதுசபையால் இத்தினம் அறிவிக்கப்பட்டது.

சுப்பிரமணிய சிவா

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.

திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.

‘ஞானபானு’ என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் ‘ஞானபானு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு 1925ஆம் ஆண்டு மறைந்தார்.

திருப்பூர் குமரன்

இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார்.

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்திற்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் ‘வந்தே மாதரம்… வந்தே மாதரம்…’ என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.

முக்கிய நிகழ்வுகள்

1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1947ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாட்டை நிறுவிய மேக்ஸ் பிளாங்க் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...