புதுடெல்லி: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதன் 2வது அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் பேசும்போது, “அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும். இதில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த முடியும்.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவையில் மூன்றில் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக அதிகரிக்கும். இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு ஒரு மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளது. உதாரணமாக உத்தர பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகளும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.

புதிய மசோதாவால் உத்தர பிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 120 ஆக உயரும். தமிழகத்தில் 59 ஆக மட்டுமே அதிகரிக்கும். வட மாநிலங்கள் கூடுதலாக 200 தொகுதிகளைப் பெறும். தென் மாநிலங்களுக்கு 66 இடங்கள் மட்டுமே கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மகளிருக்கான தொகுதிகளை அதிகரிப்பதாக கூறி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். புதிய மசோதாக்கள் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் மரேஷ் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசும்போது, “மகளிக்கு இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் விளையாட்டை நடத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது, “ஒரு மசோதாவை எப்போது கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தெரியும்” என்றார்.
