டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி..!

சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இதில் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது.

வெகுநேரமாக காத்திருந்தும், அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்த முன்வரவில்லை. இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, ரெயில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.

இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இலக்கை எவ்வித இடர்பாடும் இன்றி எட்டி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. பூந்தமல்லி மெட்ரோ ரெயில் பணிமனையில் இருந்து முல்லா தோட்டம் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை ஓட்டத்தின்போது 20 முதல் 30 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!