வாகினி – 16| மோ. ரவிந்தர்

 வாகினி – 16| மோ. ரவிந்தர்

இந்த உலகில் நாம் ஒரு உயிர் ஜீவியாக ஜனித்திட ஒரு நுழைவு வாயில் எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. அந்த நுழைவுவாயில் தான் தாயின் கருவறை என்னும் கோவில். இறைவன், இந்த உலகில் மனிதப்பிறவி எடுத்திருக்கிறான் என்ற ஒரு செய்தி உண்மையில் இருக்குமாயின், அது தாயின் கருவறை மூலமாகத்தான் இருக்கும்.

இந்த உலகில் எல்லாம் உயிர்க்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம். உலகத்தின் முதல் கருப்பொருளும் தாயின் கருவறை தான்.

சென்னை ‘அண்ணாநகரில்’ உள்ள பிரசித்தி பெற்ற குழந்தை மகப்பேறு நல மருத்துவமனை. இம்மருத்துவமனை மிகப் பிரசித்தி பெற்று விளங்கிய தற்கான சான்றிதழ் இங்கு ஏராளமாகக் காணப்பட்டது. நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் எனப் பெரும்படையுடன் என்னேரமும் அவசரத்துடன் காணப்பட்டனர்.

இந்நோய்க்கு தான் இங்கு வைத்தியம் பார்க்கப்படும் என்ற ஒரு அளவுகோல் எதுவுமின்றி, உச்சி தொடங்கி உள்ளங்கால் வரையிலான அனைத்து விதமான நோய்களுக்கும் வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பதும், ஆங்காங்கே பெரும் காட்சியாக
காணப்பட்டது.

அப்பேர்ப்பட்ட மருத்துவமனையில் ஓர் அறையில் மருத்துவர் சவுத்ரி, மூர்த்தி மற்றும் மரகதம் இருவருக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.

மருத்துவர் என்ன சொல்லப் போகிறார் என்று பெரும் வியப்போடு இருவரும், மருத்துவர் சவுத்ரின் முகத்தையே பெரும் கேள்வியுடன் கவனித்துக் கொண்டனர்.

“இங்க பாருங்க மூர்த்தி, கணவன் மனைவி இல்லற வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பாக்கியம், வரம், அது எல்லாருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

நிறையப் பேர் தனது வாழ்க்கையைப் பலவிதங்களில் தொலைத்துவிட்டு மன அழுத்தம் காரணமாக இங்கு வருகிறார்கள்.

காரணம், கணவன்-மனைவி இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு. தாய்மை அடைந்தால் தனது அழகு போய்விடும் என்ற ஒரு பெண்ணின் மனோபாவம். தனது வாழ்க்கைச் சுமைகளைச் சீர்படுத்திக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு ஆணின் எண்ணம். சிலருக்கு இறைவனால் இவர்களுக்குக் கொடுக்கப்படாத ஒரு வரம்.

ஆனால், நீங்கள் அப்படியல்ல?” என்று தனது பேச்சை நிறுத்தினார், சவுத்ரி.

மருத்துவர் ‘ஆனால்’ என்ற வார்த்தையுடன் பேச்சை நிறுத்தியதும். மூர்த்தி, மரகதம் இருவரின் மனங்களும் பெரும் பயத்துக்குள் உள்ளானது.

‘ஏன் டாக்டர், சொல்லுங்க. ஆனா என்ன? அது என்ன விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை. சீக்கிரம் சொல்லுங்கள்’ என்று நெஞ்சம் பதைபதைக்கத் தொடங்கியது.

மரகதமோ, ‘டாக்டர் எங்களுக்கு ஒரே ஒரு நல்ல விஷயம் மட்டும் சொல்லுங்க. கடவுளே! அவர் நல்ல விஷயமா சொன்னா. ஒவ்வொரு சன்னிதானத்திற்குப் பொடி நடையா வந்து, ரெண்டு பேரும் வேண்டியிருந்த அத்தனை வேண்டுதலையும் ஒன்றுவிடாமல் நிவர்த்திச் செய்கிறோம்’ என்று உலகத்தில் உள்ள அத்தனை கடவுளின் பெயர்களையும் ஒவ்வொன்றாகத் தனது மனதுக்குள் சொல்லி மிகப்பெரிய வேண்டுதலை நடத்திக்கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க டாக்டர் எங்களுக்குக் குழந்தை பிறக்குமா?” என்று கேள்வி எழுப்பினார், மூர்த்தி.

அந்தக் கேள்வியில் ஒருவிதமான ஏக்கம், தவிப்பு, பயம், வேதனை மற்றும் தந்தை என்ற பாக்கியம் தனக்குக் கிடைக்குமா ? என்ற கேள்வி பெருமளவில் மண்டிக்கிடந்தது.

“சொல்றேன் மூர்த்தி, உங்க ரெண்டு பேரையும் சோதித்துப் பார்த்ததுல உங்களுக்குத்தான்…” என்று தனது பேச்சை முடிக்காமல் மீண்டும் சட்டென்று நிறுத்தினார், சவுத்ரி.

மருத்துவர் தன்னுடைய வார்த்தையை முடிக்காமல் நிறுத்தியதுமே மூர்த்திக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. தன்னிடம் தான் ஒரு குறை இருக்கிறது என்று அவருடைய மனதில் ஒரு விதமான பயத்தை உண்டாக்கியது.

“டாக்டர்” என்ற ஒரு கேள்வியில் தனது கோரிக்கையை முன் வைத்தார், மூர்த்தி.

“ஆமா! மூர்த்தி, உங்களுடைய உயிரணுதான் முழு வளர்ச்சி அடையாமல் இருக்கு. ஆனா, இப்போ இருக்குற மருத்துவத்தை வச்சு சரிப்படுத்திடலான்னு நெனச்சாலும் அதுக்கு உங்க வயசு, உடல் ஒத்துழைக்காது. ஒரு டாக்டரா எனக்குத் தெரிந்த வரையில் அது தோல்வியில்தான் முடியும்.” என்று பதில் சொன்னார், மருத்துவர் சவுத்ரி.

“டாக்டர், நீங்க என்ன சொல்ல வரீங்க? அப்படி எதுவும் நான் பெரிய தப்பு செய்யலே” என்று பெரும் பயத்துடன் மூர்த்திக் கூறினார்.

“இல்லைங்க மூர்த்தி, நான் உங்கல எதுவும் தப்பா சொல்லல. ஆனா, இது உங்க உயிரணுவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், குறைபாடு. இந்தக் குறைபாட்டை 75% பேருக்கு முடிஞ்சவரை சரி படுத்திடலாம். ஆனா, உங்களோட உயிரணு உற்பத்தி திறனை முழுமையா இழந்து இருக்கிறது. கோடியில ஒருத்தருக்கு தான் இதுபோன்ற பாதிப்புப் பெருமளவில் ஏற்படும். இப்போ உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

“டாக்டர், காசு பணத்தைப் பத்தி எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. வேற எங்கயாவது…” என்று அவசரமாக ஒரு ஒரு கேள்வி எழுப்பினாள், மரகதம்.

“அம்மா…, உங்க ரெண்டு பேருக்கும் உடம்புல எந்தக் குறையும் இல்லை நிச்சயம் குழந்தை பொறக்கும். ஒரு லட்சம் இரண்டு லட்சம் செலவாகுன்னு பொய் சொல்லவோ, பணத்தைப் பறிக்கவோ நா விரும்பல. நோயாளிங்க ஒரு டாக்ட தேடி வர்றதே நம்மோட நோய்க்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்குமுன்னு நம்பி வராங்க. நானும் அதைத் தான் உங்களுக்குச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

நீங்க வேற எந்த மருத்துவமனையைத் தேடிப் போனாலும் இதுதான் அவங்க உங்களுக்குச் சொல்லுவாங்க. வேணும்னா, ட்ரை பண்ணி பாருங்கம்மா” என்றார் டாக்டர், சவுதரி.

“டாக்டர், இதற்கு வேறு வழியே இல்லையா?” என்று பெரும் கண்ணீரோடு கேட்டார், மூர்த்தி.

“மூர்த்தி, உங்களுக்கு நான் என்ன பதில் சொல்றதுனே எனக்குத் தெரியல. இந்தக் காலத்தில் எவ்வளவோ மருத்துவம் முன்னேறி இருக்கு. இருந்தாலும், ஒரு சில நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல்தான் இருக்கு. அறிவியலை மிஞ்சிய ஒரு தெய்வ சக்தி இருக்கத்தான் செய்யுது.

இது கடவுளின் சோதனையா? இல்ல, இன்னும் அறிவியல் முன்னேற்றம் அடையலன்னு சொல்றதானே தெரியல ?.

ஆனா, உங்களுக்கு நண்பனா ஒரு விஷயம் சொல்றேன். உங்க ரெண்டு பேரோட மனம் அத ஏத்துக்குமான தெரியல.

“சொல்லுங்க டாக்டர், வேற என்ன நாங்க செய்யணும்?” என்று இருவரும் கண்ணீர் மல்க மருத்துவரை வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

“ஒரு டாக்டரா, நான் உங்களுக்கு இதைச் சொல்லக்கூடாது. இருந்தும், ஒரு மனிதன் என்ற மனிதாபிமானத்துல இதை உங்களுக்குச் சொல்கிறேன்.

மரகதம், மூர்த்தி இருவரும் பெரும் ஆவலுடன் “சொல்லுங்க டாக்டர் நாங்க என்ன செய்யணும்” என்ற வார்த்தையை முன்வைத்தனர்.

“ஒண்ணு செயற்கை கருத்தரிப்பு, உங்க மனைவியோட கருப்பையில் செயற்கையான கருமுட்டையைச் செலுத்தி செயற்கையான முறையில் செய்து கருத்தரிப்புச் செய்யலாம். ஆனால், உங்கள் மனைவி அந்த வயதைத் தாண்டி இருக்கிறார். அதற்கு அவருடைய உடல் ஒத்துழைக்குமான்னு தெரியவில்லை. மற்றொன்று….?” என் பேச்சை நிறுத்தினார்.

“சொல்லுங்க டாக்டர்…” என்று பெரும் பயத்துடன் மீண்டும் கேட்டார், மூர்த்தி.

“இந்த உலகத்தில் எத்தனையோ குழந்தைகள் தாய், தகப்பன் இல்லாம அனாதையாக இருக்காங்க. ஏதாவது ஒரு குழந்தையை நீங்க தத்தெடுத்து, உங்க தாய் தந்தை பாசத்தை அவங்களுக்குக் காட்ட முயற்சி பண்ணுங்க. அது உங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஒரு மாற்றத்தை தரும்” என்று தனது வாக்கியத்தை முன்வைத்தார், டாக்டர் சவுத்ரி அவர்கள்.

இருவரும் ஏதோ ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் வந்தனர். ஆனால், மருத்துவரின் சொல் ஜீரணிக்க முடியாத ஒரு சொல்லாக அமைந்தது.

செயற்கை கருத்தரிப்பா? இல்லை தத்தெடுக்கும் முயற்சியா? என்ற நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் கணவன் மனைவி இருவரும் பொங்கி வெடிக்கும் பூமிபோல் பேரதிர்ச்சியுடன் மருத்துவர், முகத்தையே பெரும் கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

– தொடரும்…

< பதினைந்தாம் பகுதி

கமலகண்ணன்

4 Comments

  • நண்பரே ! இந்த கதையின் போக்கு வாழ்க்கையின் தழுவலை எதார்த்தமாக தாங்கி நிற்கிறது. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல கதைகளை கையில் எடுங்கள் ஆவலுடன் நாங்கள் காத்து நிற்கிறோம்.

    • நன்றி தோழர் வாசிப்பு குறைந்து கொண்டே இருக்கும் நேரத்தில் வாழ்த்துக்கள் தெரிவிப்பது மனம் மகிழ்கிறது

  • மரகதம் மற்றும் மூர்த்தியின் குழந்தை ஏக்கம் மனதை வாட்டுகிறது.டாக்டர் சவுத்ரி விளக்கம் சிறப்பு.வாழ்த்துக்கள்.

    • நன்றி தோழர் கதையின் முழு முகவரியை ஒருவரியில் படித்து விட்டீர்கள்

Leave a Reply

Your email address will not be published.