சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன், வருகிற 18-ம் தேதி சென்னை தங்கசாலையில் உள்ள, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை செல்ல அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, ‘இந்துக்களுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில், சென்னையில் கந்தகோட்டம் முருகன் கோவிலை நோக்கி, அமைதியான முறையில், வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியும், போலீசார் அனுமதிக்கவில்லை என்றார்.
அப்போது காவல் துறை தரப்பில், தற்போது வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரும் மின்ட் பகுதி, போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலையின் உரிமை தொடர்பாக, ஏற்கனவே, ‘பிரிவியூ கவுன்சில்’ வரை சென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும், மத நல்லிணக்கத்துடன் சமூக ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, இந்த ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது. பொது அமைதி, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை பேணப்பட வேண்டும்,’ என வாதிடப்பட்டது.இதையடுத்து, ‘திருப்பரங்குன்றம் மலையை காக்க, சென்னையில் பேரணி செல்ல வேண்டிய அவசியம் என்ன?’ என, நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தீர்ப்பை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது. மேலும் பாரத் இந்து முன்னணி யுவராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.