இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 24)

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு தினம் வேண்டுமா என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். மொத்தமாக குழந்தைகள் தினம் என ஒரு நாள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறதே. எதற்காக பெண் குழந்தைகள் தினம்? என்னும் சந்தேகம் உதிக்கலாம். சொல்லப்போனால் இந்த தினம் கொண்டாடப்படுவதற்காக என்று சொல்வதை விட, பெண் குழந்தைகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை முன்வைக்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் இந்த தினம் நிச்சயம் வேண்டும். முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தைகள் உரிமை மறுக்கப்பட்டது, பெண் சிசுவை கொலை செய்வது போன்ற செயல்கள் அரங்கேறின. இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறினால், அது நம் அறியாமையை காண்பிக்கும்.நாம் மேற்கூறிய வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட நம் தேசத்தில், ஒரு இடத்தில் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமைக்கு ஒரு பெண் குழந்தை ஆளாகி இருக்கும். இன்னும் நம் சமூகம் பெண் குழந்தைகள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு தீங்குகளை விளைவித்துக்கொண்டு தான் இருக்கிறது. பெண் பிள்ளை பிறந்தால் வீட்டுக்கு லக்ஷ்மி வந்ததாக அர்த்தம், பெண் குழந்தைகளே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டு வரும் தேவதைகள் என்று அவர்களை போற்றிப் பாடும் துதியை முதலில் நிறுத்துவோம். ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருப்பினும் சமமாக நடத்துவதில் தான் நம் தேசத்தின் சமநிலை இருக்கிறது. அதையே பெண் குழந்தைகள் தினமும் நமக்கு எடுத்துரைக்கிறது. இருந்த போதிலும் பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் இளம் தலைமுறை பெற்றோர்களால் தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது என்பதும் உண்மை.

வின்ஸ்டன் சர்ச்சில் காலமான நாள்

போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ – இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்… இவையே வின்ஸ்டன் சர்ச்சில். பத்திரிகையாளனாகத் தன் வாழ்வைத் தொடக்கிய சர்ச்சில், ராணுவ வீரனாக உயர்ந்து தளபதியாக உருவெடுத்து நிதி அமைச்சராகி, இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக ஜொலித்தவர் அவர் போர் அனுபவங்களைப்பற்றிப் பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார். அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவைப் பற்றியும் இந்தியத் தலைவர்கள் குறித்தும் இவர் நல்ல கருத்து கூறியவரில்லை.

அணு உலைகளின் தந்தை ஹோமி பாபா மறைந்த நாள்

அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. ஒரு வரியில் சொல்வதென்றால் இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மானித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909ல் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது. எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த ‘தியரி’யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது. 1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா ‘விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்’ என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார். 31 வயதில் ‘மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி’ விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும். Atomic Explosion, Production of Isotopes, Purification of Uranium முதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தை இவர். நாடு சுதந்திரமடைந்ததும் Atomic Research Centre ஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார். இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது. 1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார். ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின. \ இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. 18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.

இந்தியாவில் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ஜனகன மண பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், அதே நாள் தேசிய பாடலாக வந்தே மாதரம் பாடல் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதனை அறிவித்தார்

ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம்

மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று (ஜனவரி 24, 1922). இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான இவர், அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.

சி.பி. முத்தம்மா பர்த் டே டுடே

இன்னைக்கு ஆண்-பெண் வித்தியாசமின்றி பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகள்-ல தேர்ச்சி பெற்று அதிகார பொறுப்பு வகிக்கிறாங்க. ஆனா பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம் இந்தியாவில் சூழல் அப்படி இல்ல. பெண்களுக்கு இந்த சிவில் சர்வீஸ் என்பது எட்டாக்கனியாக தான் இருந்துச்சு. அந்த நிலையை மாற்றி வரலாற்றுல தன்னோட பெயரை அழுத்தமா பதிவு செஞ்சு, பல பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உந்துசக்தியா இருந்தவங்கதான் சி. பி. முத்தம்மா. முத்தம்மாங்கிற பெயரை இன்னிக்கும் நாம சொல்றோம் இவரை பத்தி பேசுறோம்னா அதற்கு இவரோட துணிவு, விடாமுயற்சி, போராட்ட குணம், தன்னம்பிக்கை இதெல்லாம் தான் காரணம். எல்லா சூழலும் தனக்கு எதிரா இருந்தாலும் தன்னம்பிக்கையும், அறிவுத் தேடலும் நமக்கு கேடயமா இருக்கும். நமக்கு மட்டுமில்ல நம்ம சார்ந்த இந்த சமூகத்துக்கேங்கிறது ஆழமா பதிய வச்ச முத்தம்மா வரலாற்றுல எப்பவும் அழியாத பெயர்.

சர்வதேச கல்வி தினமின்று

ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறதுஇந்நாள் கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் 59 நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது. அறிவு என்பது கொண்டு வந்ததல்ல, வளர்த்துக்கொண்டது. அனுபவத்தால் விரிவுபடுத்திக்கொண்டது. இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் தொடரும் போதுதான் வளர்ச்சி வருகிறது, வாழ்வு உயர்கிறது. இந்த ஒரு பின்னணியில்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி அனைத்துலக கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது இந்நாள். 2018ஆம் ஆண்டு டிசம்பர் 3, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!