விரைவில் சிம்பொனியில் தாலாட்ட வரும் இசைஞானி..!
இசையமைப்பாளர் இளையராஜா தன் முதல் சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜன.26ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீப காலமாக வெளியாகும் தமிழ்ப் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கான திரைக்கதை நடிகர் கமல்ஹாசன் எழுதுகிறார். இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி (சிம்பொனி – மேற்கத்திய நாடுகளின் சாஸ்திரிய இசையில் ஒரு பிரபலமான வகை) இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், இளையராஜாவின் சிம்பொனி இசையின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் இசையமைத்த முதல் சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜனவரி 26 ம் தேதி வெளியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன் என்பதையும், அந்த சிம்பொனி இசை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.