‘கொஞ்சம் பேசினால் என்ன?’ படம் எப்படி இருக்கு… விமர்சனம்..!
பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓவியரான அஜய் (வினோத் கிஷன்), ஆறு ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார். துரதிர்ஷ்டவசமாக கொரோனா பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட, தன் வீட்டிற்குள்ளேயே நாள்களைக் கடத்துகிறார். அப்போது ஆடை வடிவமைப்பாளரான சஞ்சனாவுடன் (கீர்த்தி பாண்டியன்) சமூக வலைத்தள வழியில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகக் கனிகிறது. ஒருவரை ஒருவரை நேரில் பார்த்துக்கொள்ளாமல், வீடியோ கால்களில் வளரும் இக்காதலானது, சில பல உரசல்களுக்குப் பின் இறுதியில் என்ன ஆனது, காதலர்கள் சந்தித்துக்கொண்டார்களா என்பதே அறிமுக இயக்குநர் கிரி மர்ஃபியின் ‘கொஞ்சம் பேசினால் என்ன’ திரைப்படம்.
வினோத் கிஷனுக்குப் பெரிய வேலை இல்லை. கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார். ஆனாலும், சில இடங்களில் அவரின் நடிப்பைப் பார்க்கும்போது அவரின் முந்தைய படங்களின் கதாபாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. கீர்த்தி பாண்டியன் கிடைக்கும் எல்லா ப்ரேம்களிலும் ‘நடித்த்த்த்…து’க்கொண்டிருக்கிறார். அவரின் நடிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் (!) அக்கதாபாத்திரமும் காட்சிகளும் ஆழமாக இல்லை. ஒரேயொரு இடத்தில் மட்டும் சிரிக்க வைக்கிறார் ஆஷிக். கௌதம் சுந்தர்ராஜன், காம்னா பத்ரா, ஆகாஷ் பிரேம்குமார் என எந்தக் கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியான பங்களிப்பைச் செய்யவில்லை.
கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் தனித்தனி கலர், லைட்டிங் என லெனினின் ஒளிப்பதிவானது தொடக்கத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் தந்தாலும், அதைத் தவிர வேற எந்தக் கவனிக்கத்தக்கப் பங்களிப்பையும் செய்யாமல் ஏமாற்றியிருக்கிறது. தனசேகர்.இ-யின் படத்தொகுப்பு அரைத் தூக்கத்தில் நடந்துகொண்டிருக்கும் திரைக்கதையை மேலும் தூங்க வைக்கவே உதவியிருக்கிறது. தீபன் சக்கரவர்த்தியின் இசையில் அந்தோணி தாஸன் குரலில் ‘மண்ணோட வீரத்திற்கும்’ பாடலும், பிரதீப் குமார் குரலில் ‘குடையை விடுத்து மழையில்’ பாடலும் ரசிக்க வைத்தாலும் படத்திற்கு எந்தப் பலத்தையும் சேர்க்கவில்லை. அதே சமயம் பின்னணி இசையால் எமோஷனலான காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர்.
லாக்டௌன் காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை, எவ்வித ஏற்ற இறக்கங்களும் இன்றி, ஜவ்வாக இழுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிரி மர்ஃபி. தொடக்கத்தில் வாய்ஸ் ஓவர்களால் அறிமுகமாகும் பிரதான கதாபாத்திரங்கள், சிறிது நேரத்திலேயே கதை என்ற வஸ்துவைக் கண்டடைந்துவிடுவது நம்பிக்கையான தொடக்கத்தையே கொடுக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு படம் அறைக்குள் முடக்கப்பட்டிருக்கும் அவர்களைப் போலவே நகரவே நகராமல் தேங்கி நிற்கிறது.
காதலர்களுக்கு இடையே ஒரு பிரச்னை அல்லது தவறான புரிதலை உருவாக்கி, அதன் மூலமாகத் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த ‘கான்ஃப்ளிக்ட்டும்’ ஆழமில்லாமல் வெறும் காமெடியாக மாறவே, மொத்தமாகவே சுவாரஸ்யமற்று, அசதியையே தருகிறது படம். காதலர்களின் பள்ளிக் கால வாழ்க்கையைச் சொல்லும் பின்கதை தொகுப்பும், ஜவ்வாக நீண்டு, இரண்டாம் பாதியை விழுங்கிவிடுகிறது. இடையிடையே சிரிக்க வைக்காத காமெடி, ரசிக்க வைக்காத பாடல்கள் எனக் கண்ணுக்கெட்டும் தூரம் வரை சோதனைச் சாவடிகளே!
டிராமாவாக நகராமல், டன் கணக்கான வசனங்களாலும், ரிப்பீட் அடிக்கும் க்ளோசப் காட்சிகளாலும், மேம்போக்கான வாய்ஸ் ஓவர்களாலும் திரைக்கதையை இறுதிக்காட்சி வரை ‘தள்ளியதும்’, முழுநீள திரைப்படத்திற்கான மெனக்கெடலும் திரைமொழியும் இல்லாமல் போனதும் பெரும் சறுக்கல். இதனாலேயே ஒரு குறும்படத்தை வலுக்கட்டாயமாகத் திரைப்படமாக்கிய உணர்வைத் தருகிறது படம்.