நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் பிப்.2-ல் போராட்டம் – மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தின் NREGA யின் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காவிடில், தர்ணாவில் ஈடுபடப் போவதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டி வருகிறது. மேலும் இதற்கான நிதிகளை பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் வெள்ளிக்கிழமையன்று தர்ணாவில் ஈடுபட உள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய ரூ. 7,000 கோடி நிதியும், வீட்டு வசதி திட்டத்துக்காக சுமார் 11 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டும் அதற்கான நிதியும் இன்னும் மத்திய வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
நான் பிரதமரை மூன்று முதல் நான்கு முறை வரை சந்தித்து விட்டேன். ஆனால், இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை. நான் ஏழுநாள் அவகாசம் அளித்தேன். பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் எங்களுக்கு நிதி அளிக்க வேண்டும். இல்லையேல், பிப்ரவரி 2ஆம் தேதி தர்ணாவில் ஈடுபடுவோம். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என கூறினார்.
அறிவிப்பை பாஜகவின் தலைவர் சுவேந்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
பிப்ரவரி 2 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் நிலை தேர்வு நடைபெற உள்ளது. அப்போது இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளை நிகழ்த்த உங்களுக்கு (மம்தா பானர்ஜி) எந்தவித உரிமையும் கிடையும். மாணவர்களுக்காக இதுபோன்ற நிகழ்ச்சியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு பின்னரும் அவர் தர்ணாவில் ஈடுபட்டால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். இது வெறும் தேர்தல் நாடகமே ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.