காலை உணவு திட்டம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும்  செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு | சதீஸ்

 காலை உணவு திட்டம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும்  செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு | சதீஸ்

அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும்  செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு  முதலமைச்சர்  கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ந்தேதி அன்று மதுரை அரசுப் பள்ளியில் (CMBFS) வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து காலை உணவு திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, “நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று  அறிவித்தார்.

மேலும், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை  என்றும் தெரிவித்தார்.

இந்த காலை உணவு திட்டம், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம்  நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 1 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம்.  வரும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...