பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் ஜனவரி 24ம் தேதி திறப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் | சதீஸ்

 பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் ஜனவரி 24ம் தேதி திறப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் | சதீஸ்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்து வைப்பதற்காக ஜனவரி 24ம் தேதி அங்கு வரவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூரில் மிகப் பிரமாண்டமான முறையில் ஜல்லிக்கட்டுக்கு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. திமுக அரசில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது திறப்பு விழாவுக்குத் தயாராகி விட்டது.

ஜனவரி 24ம் தேதி இந்த அரங்கம் திறக்கப்படவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரங்கத்தைத் திறக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில் கூறியுள்ளதாவது

தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் #ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று,  அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.  வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...