பிரதமரின் தமிழ்நாடு வருகை | சதீஸ்

 பிரதமரின் தமிழ்நாடு வருகை | சதீஸ்

3 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. சென்னை வரும் பிரதமர் மோடி, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தை பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி. பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். தொடர்ந்து ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடுகள் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

அதன்பின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுநாள் (ஜனவரி 20) காலை பிரதமர் மோடி, திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் செல்கிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து கார் மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், திருச்சியில் இருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்து அதன் பிறகு ராமேஸ்வரம் புறப்படுகிறார். பிற்பகலில் ராமேசுவரத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன்பின் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார்.

அன்று (ஜனவரி 20) இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார். மறுநாள் (21ஆம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன் பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.

பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். அதன் பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துச் செல்லும் தீர்த்தத்தை அயோத்திக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி வருகை எதிரொலியாக திருச்சியில் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை என 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட மாவட்ட பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, சென்னை, ராமநாதபுரம் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...