திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஒட்டைத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார் | சதீஸ்
திமுக இளைஞரணி மாநாடு ஏற்கெனவே இருமுறை தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஜனவரி 21ம் தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, சேலத்தில் அதற்கான ஏற்பாடு பணிகள் கனஜோராக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்காக சுடர் தொடர் ஓட்டத்தை இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இளைஞர் அணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சராக பதவியும், கட்சியிலும் கூடுதல் பொறுப்புகள் வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலை சிம்ஸ் சந்திப்பு அருகே காலை 7 மணி அளவில் சுடர் தொடர் ஓட்டத்தை திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சுடரை ஏற்றி வைத்து அதன் பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த சுடர் ஓட்டம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் வழியாக பெத்தநாயக்கன்பாளையத்திற்கு ஜனவரி 20ம் தேதி மதியம் 1:30 மணிக்கு சென்றடைகிறது. மாநாட்டு சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.