இந்தியாவே வியக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | சதீஸ்

 இந்தியாவே வியக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | சதீஸ்

நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர் மாநாடு என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்! என்றும் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுமார் 20 ஆயிரம் பிரதிநிதிகள் மற்றும் 39 லட்சம் மாணவர்கள், இதில் எல்லாம் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள்.

முக்கியமாக, நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது, எங்கள் அரசு மீதும், எங்கள் கொள்கைகளின் மீதும் வைத்திருக்கிற உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது, எங்களுடைய தலையாய கடமை. எங்களுடைய அரசை பொருத்தவரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் இருந்து உங்களுடைய எல்லா செயல்களுக்கும், அதாவது நீங்கள் உங்கள் தொழிற்சாலையை முழுமையாக கட்டி முடித்து, உற்பத்தியை தொடங்குவதில் இருந்து, அதற்கு பிறகும் கூட, உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.

உங்களுக்கு எந்த தருணத்திலும், என்னிடம் ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னோட அலுவலகத்தை, நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த உறுதிமொழியை நான் தொழிற்துறை அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் வழங்குகிறேன். அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். உலக முதலீட்டாளர் மாநாட்டினை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இருநாள் மாநாடு – 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் – மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர் மாநாடு. ‘எல்லோருக்கும் எல்லாம்’,’எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’ என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்! என்றும் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...