உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு | சதீஸ்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, வரும் 7-ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்க உள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்ற உள்ளார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
மேலும், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான ஜனவரி 8-ஆம் தேதி பல்வேறு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அன்று மாலை 4.30 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுகிறார்.