ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி..! | நா.சதீஸ்குமார்
ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சட்டப்பிரிவு 370 தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. 2019 ஆகஸ்ட் 5 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்புரீதியாக உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமைக்கான உறுதியான அறிவிப்பு.
இந்தியர்களின் ஒற்றுமையை நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. முன்னேற்றத்திற்கான பலன் மக்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370 சட்டப்பிரிவின் காரணமாக நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.
இன்று வழங்கப்பட்டது வெறும் தீர்ப்பு மட்டும் அல்ல, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாக்குறுதியாகவும், வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.