மழைநீர் தேங்கியதால் சென்னை வியாசர்பாடியில் போக்குவரத்து நெரிசல்..! | நா.சதீஸ்குமார்

 மழைநீர் தேங்கியதால் சென்னை வியாசர்பாடியில் போக்குவரத்து நெரிசல்..! | நா.சதீஸ்குமார்

மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை வியாசர்பாடியில் 5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது.  இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைநகர் சென்னையை தாக்கியது.  பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.  மழை ஓய்ந்தாலும் இன்னும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்காமல் இருக்கிறது.  மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து, மழை தண்ணீர் தேங்கியிருப்பதால் வடசென்னை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். வடசென்னை தனித்தீவு போல மாறி உள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, சூளை, பட்டாளம், மூலக்கொத்தளம் உள்ளிட்ட பல பகுதிகள் மழை தண்ணீரால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரிகள், காவல்துறையினர் பல்வேறு வகைகளில் உதவிகளையும் வழங்கி வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வரக்கூடிய நிலையில் வடசென்னை சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி
தவிக்கிறது.

சென்னை மாதவரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வியாசர்பாடி சாலையை பயன்படுத்தி சென்னை சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலை, ராயபுரம் செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் வியாசர்பாடி மேம்பாலம் மற்றும் பேசின் பிரிட்ஜ் பாலத்தை பயன்படுத்தினர்.

இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளது. இதில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. நீண்ட நேரமாக வாகனங்கள் சிக்கியதால் பைக்கில் வந்தவர் எதிர் திசை சாலையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாத சம்பவங்களும் நிகழ்ந்தது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...