நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்..! | நா.சதீஸ்குமார்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஆந்திரம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு கடற்கரையை அடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு 630 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கு 740 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் பாபட்லாவுக்கு தென்கிழக்கே 810 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கு தென் கிழக்கு 800 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை தென்மேற்கு வங்கக் கடலில் அது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் 4-ம் தேதி தெற்கு ஆந்திரம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு கடற்கரையை அடையும்.
அதன்பிறகு, இது வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரப் கடற்கரையை அடைந்து 5-ம் தேதி முன் மதியம் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் 80-90 கிமீ வேகத்திலும் இடையே இடையே 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.” இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.