நாளை சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்! | நா.சதீஸ்குமார்
மெட்ரோ ரயிலில் டிச.3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில்வே நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சிறப்புக் கட்டண சலுகையை மெட்ரோ நிா்வாகம் வழங்கியுள்ளது.
அதன்படி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிச.3-ம் தேதி க்யூஆர் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று ஒருவழிப்பாதைப் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிச.3-ம் தேதி மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆா் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை, கைப்பேசி செயலி, ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் உள்ளிட்ட முறைகளில் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது என மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த நவம்பர் மாத்தில் மட்டும் 80 லட்சத்து ஆயிரத்து 210 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக நவம்பர் 10-ம் தேதி 3 லட்சத்து 35 ஆயிரத்து 677 பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட் போன்ற பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குவது குறிப்பிடத்தக்கது.