அயோத்திதாச பண்டிதரின் நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..! | நா.சதீஸ்குமார்

 அயோத்திதாச பண்டிதரின் நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..! | நா.சதீஸ்குமார்

சென்னையில் அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அயோத்திதாசப் பண்டிதரின் 175-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் நினைவாக ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பில் சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மணிமண்டபத்தை இன்று திறந்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“இது அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த அயோத்தி தாசர் பெருமையை போற்றும் வகையில் இந்த திருவுருவ சிலை அமைக்கப்பட்டும் என 2021-ம் ஆண்டு அறிவித்தேன்.  இந்த மணிமண்டபம் அறிவொளி இல்லமாக அமைந்துள்ளது. இந்த சிலையை திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறேன்.

தமிழ்நாட்டு அரசியலில் தமிழன், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களை அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்தி தாசர். தமிழ் அல்லது திராவிடம் மொழி மட்டும் அல்ல, அது ஒரு பண்பாட்டு நடைமுறையாக மாற்றியவர் அயோத்தி தாசர். 1907-ம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழை தொடங்கி, அதையே தமிழன் என்ற இதழாக நடத்தி வந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து வேற்றுமையையும் மறந்து, ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர்.

சாதிய அடுக்கு முறை சமூகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தலைசிறந்த சிந்தனையாளர்களில் அயோத்திதாச பண்டிதர் குறிப்பிடத் தக்கவர். 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, பௌத்த சமய வழியில் தீண்டாமைக்கு எதிரான சிந்தனைகளை வளர்த்தெடுத்து, சுயமரியாதை, சமதர்ம கருத்துக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். ஏடுகள் தொடங்கி வாசிப்பு வழி பரப்புரை தளம் அமைத்தவர்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...