உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்..!| நா.சதீஸ்குமார்
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி 17 நாட்களாக உயிர் ஊசலாடிய நிலையில் 41 தொழிலாளர்களும் இன்று பத்திரமாக வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சுரங்கத்தில் இருந்து அவர்கள் 17 நாட்களுக்கு பிறகு வெளியே வரும்போது அவர்களின் முகமலர்ச்சி குறித்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா எனும் இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால் அன்றைய தினம் கூட சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்துக்குள் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 17 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், வெளிநாட்டு எக்ஸ்பர்ட்டுகள், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் தான் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கப்பதற்கான துளையிடும் பணி இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீட்பு படையினர் 41 தொிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.
இரவு 8 மணி முதல் ஒவ்வொரு தொழிலாளர்களையும் மீட்பு படையினர் சுரங்கத்தில் இருந்து மீட்டு வந்தனர். இரவு 840 மணியளவில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து 410 மணிநேரம் நடந்து வந்த மீட்பு பணி என்பது வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த குடும்பத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே தான் சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்படும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகின்றனர். அதாவது சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்கள் முகம் ஷாக்கில் இருக்கின்றனர். அதன்பிறகு அவர்களிடம் மீட்பு படையினர், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதையடுத்து அவர்களின் முகம் அப்படியே மாறி புன்னகைக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் தொழிலாளர்களின் மனதைரியத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் வரும் நாட்களில் பிரச்சனை இன்றி வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் மீட்பு பணியை சிறப்பாக மேற்கொண்டு 100 சதவீதம் வெற்றி பெற்ற மத்திய, மாநில அரசுகளையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.