சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீச்சு..! | நா.சதீஸ்குமார்

 சென்னை கொத்தவால்சாவடியில் பெட்ரோல் குண்டு வீச்சு..! | நா.சதீஸ்குமார்

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருக்கா வினோத் என்பவர் வீசிய பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என போலீஸ் தரப்பும், 2 குண்டுகள் வெடித்ததால் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் பகுதி சேதமடைந்ததாகவும் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு விளக்கம் அளித்தது காவல்துறை.

இந்நிலையில், தற்போது சென்னையில் கோயிலில் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவில். அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளி கிருஷ்ணன் என்பவர் மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு கோயில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார். முரளி கிருஷ்ணன் கையில் பெட்ரோல் குண்டு இருப்பதை அறிந்து கோவில் உள்ளே இருந்த பூசாரி அலறி அடித்து வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கோயில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார் முரளி கிருஷ்ணா.

கோவிலுக்கு வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தகவல் அறிந்து அதிர்ந்து போய் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பெட்ரோல் குண்டை வீசிய முரளி கிருஷ்ணனை பிடித்து கைது செய்தனர். அப்போது பயங்கரமான குடிபோதையில் இருந்துள்ளார் முரளி கிருஷ்ணன்.

அவரிடம் போலீசார் விசாரித்ததில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கடவுளே வழிபட்டு வருவதாகவும், பிரார்த்தனை செய்து வருவதாகவும் ஆனால், கடவுள் எனக்கு திருப்பி ஏதும் தரவில்லை. அந்த கோபத்தில் குண்டு வீசினேன் என மது போதையில் கூறியுள்ளார். முரளிகிருஷ்ணணை கைது செய்த கொத்தவால்சாவடி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் அப்பகுதியில் முந்திரி, உலர் பழங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கோவிலில் குண்டு வீசிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...