இந்தியாவில் வரும் “ஏர் டாக்ஸி..” | நா.சதீஸ்குமார்

 இந்தியாவில் வரும் “ஏர் டாக்ஸி..” | நா.சதீஸ்குமார்

இந்திய நகரங்களில் டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறும் நிலையில், இதற்குத் தீர்வாக ஏர் டாக்ஸியை இண்டிகோ அறிமுகப்படுத்த உள்ளது.

நமது நாட்டில் டிராபிக் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பது, அதிகரிக்கும் வாகனங்கள் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முன்பு ஓரிரு நகரங்களில் மட்டும் டிராபிக் என்பது பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது கிட்டதட்ட அனைத்து நகரங்களிலும் டிராபிக் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. பீக் ஹவரில் எங்குச் சென்றாலும் கொஞ்ச நேரம் சாலையிலேயே நிற்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.

இந்த டிராபிக்கை சமாளிக்க பல்வேறு தீர்வுகள் முயற்சிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவின் டாப் விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்க உள்ளது. வரும் 2026ஆம் ஆண்டில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸியான இது முழுக்க முழுக்க மின்சார ஏர் டாக்ஸியாக இருக்கும் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும். மேலும், வழக்கமான டாக்ஸிகளுக்கு போட்டிப் போடும் வகையில் ஏர் டாக்ஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், காற்று மாசும் உச்சத்தில் இருக்கும் நிலையில், இரண்டிற்கும் இது தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஏர் டாக்ஸிக்கு விரைவில் அனுமதியும் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் இந்த ஏர் டாக்ஸியை உருவாக்குகிறது. இந்த ஏர் டாக்ஸியால் செங்குத்தாகப் புறப்படவும் தரையிறங்கவும் முடியும். நகரில் டிராபிக் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தீர்வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஏர் டாக்ஸியில் ஒரு நேரத்தில் நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட் என மொத்தம் 5 பேர் பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ்ஸ செய்தால் சுமார் 161 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கலாம். முதற்கட்டமாக 200 விமானங்களுடன் தேசியத் தலைநகரான டெல்லி, நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பை மற்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் டெல்லியில் காரில் பயணிக்க 60 முதல் 90 நிமிடங்கள் எடுக்கும் தூரத்தை இந்த ஏர் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்களில் சென்றடைய முடியும். இதில் டாக்ஸி மட்டுமின்றி மருத்துவம், அவசரக்கால பொருட்கள் ஆகியவற்றை டெலிவி செய்யவும் இண்டிகோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆர்ச்சர் நிறுவனத்திடம் இருந்து பல நாடுகளும் இந்த ஏர் டாக்ஸியை வாங்க ஆர்வம் தெரிவிக்கின்றன. வரும் காலங்களில் முக்கிய நகரங்களில் டிராபிக் நெரிசலைக் குறைக்கும் முக்கிய தீர்வாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...