காஷ்மீராக மாறிய மதுரை..! | நா.சதீஸ்குமார்

 காஷ்மீராக மாறிய மதுரை..! | நா.சதீஸ்குமார்

அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் நீரில் இருந்து நுரை பொங்கி வருகிறது. சாலையெங்கும் நுரை பரவி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் நுரை பரவாமல் கண்மாயை சுற்றிலும் திரை போட்டு மறைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ளது அயன்பாப்பாக்குடி கண்மாய். இந்த கண்மாய் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வழிகிறது.

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், சுற்றுவட்டாரத்தில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இங்குள்ள கண்மாயில் கலக்கிறது. இந்த கண்மாயில் இருந்து அருகில் உள்ள மறுகால் ஓடையில் அதிவேகத்தில் நீர் பாய்ந்தோடுகிறது.

இந்நிலையில், பஞ்சு போன்ற வெண்மை நிற நுரை உருவாகி, சாலைகளில் மலைபோல் குவிந்து வருகிறது. இந்த நுரையானது காற்றில் பறந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகளும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் தடுமாற்றத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். காற்றில் பறந்து, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. நுரை மேலை விழுவதால் வாகன விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

மதுரை மாநகரின் கழிவுநீரை குழாய்கள் மூலம் அவனியாபுரம் அருகிலுள்ள வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழை நீரோடு பாசனக் கால்வாயில் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக கண்மாயில் கலக்கிறது.

தற்போது, கண்மாயில் இருந்து விவசாயத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் வெண்மை நிற நுரை கிளம்பி வருவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வாய்க்கால் நீருடன் கலந்து வெண்ணிற நுரை கிளம்பி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் முறையாக அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் குறிப்பிட்ட அளவு கழிவுநீர் கண்மாயில் கலப்பதாகவும், இதனால் அவனியாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது அவனியாபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ரணகளத்திலும் குதூகலம் என்பது போல மலைபோல குவிந்திருக்கும் பஞ்சு நுரை முன்பாக பலரும் செல்பி எடுத்து பதிவிட்டனர்.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றினால் நுரையை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் முறையைத் தடுக்க அதிகாரிகள் திரை போட்டாலும் அதையும் தாண்டி நுரை வெளியேறி மீண்டும் சாலையில் சென்று விழுகிறது. கழிவு நீர் கலப்பதை முழுமையாக தடுத்தால் மட்டுமே முறை வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிகாரிகள் தெர்மாகோலை விரித்து வைத்தனர். அதே போல தற்போது நுரை பறந்து வராமல் தடுக்க திரை போட்டி மூடி வைத்துள்ளனர். அதையும் தாண்டி நுரை பறந்து வருவதால் என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...