குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் இன்று ஒரு நாள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயில் யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தில் பல் சக்கரத்தால் ரயில் பெட்டிகளை இழுத்து செல்வதுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் மலை முகடுகள், பாறை குகைகளுக்கும் அமைந்துள்ள ரயில் பாதையில் பயணிப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்து மக்கள் இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழை காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கல்லார் வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
அதனால் மலை ரயில் பாதை அமைந்துள்ள ஹில்கிரோ ஆடர்லி ஆகிய பகுதிகளின் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 160 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலை ரயில் கல்லார் ரயில் நிலையத்திலேயே பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மண்சரிவு சீரமைக்க பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பணிகள் முழுமை பெற காலதாமதம் ஏற்படும் என்ற தகவலை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்லார் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வேறு வழியில்லாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யபட்டு பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் குன்னூர் அனுப்பி வைக்கப்பட்டனர். மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க வந்த ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்தில் பயணம் செய்தனர்.