புதுச்சேரியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது.
மத்திய அரசு கட்டண குறைப்புடன் மாநில அரசு மானியத்தையும் சேர்த்தால் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது.. அதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுக்கான சிலிண்டர் விலை ரூ.350 வரை குறைகிறது. விரைவில் இந்த திட்டம் புதுவையில் செயல்பாட்டுக்கும் வரப்போகிறது. கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்த நிலையில், இந்த அதிரடியை பிறப்பித்துள்ளது. ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதாவது, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.200 மானியத்துடன் இப்போதைய ரூ.200 விலைக்குறைப்பும் சேர்ந்து ரூ.400 வரை விலை குறைகிறது. இந்த கட்டணச் சலுகை நாடு முழுவதும் நேற்றைய தினமே உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.
பாஜக அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, விமர்சித்தும் வருகின்றன.. முன்னதாக, புதுச்சேரியில் மாநில அரசு சிவப்பு ரேஷன் கார்டுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரூ.300, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.150 வழங்குவதாக அறிவித்திருந்தது.. இந்த மானியம் வருடத்துக்கு 12 காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில், இந்த மானியம் வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்திருந்தனர். ஆனால், இதுவரை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் இந்த மான்யம் செலுத்தப்படவில்லை. இந்த நிமிடம்வரை முழுத்தொகையை கட்டித்தான், காஸ் சிலிண்டரை மக்கள் வாங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில்தான், திடீரென, மத்திய அரசின் மானியம் வழங்கும் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும்போது மத்திய அரசின் மானியம் நேரடியாக குறைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புதுவை அரசும் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினால், சிவப்பு ரேஷன் கார்டுக்கு மத்திய அரசின் ரூ.200, மாநில அரசின் ரூ.300 சேர்த்து ரூ.500 சிலிண்டர் விலையில் குறையும். புதுச்சேரியில் மொத்தமுள்ள 3.5 லட்சம் ரேஷன் கார்டுகளில் 1.7 லட்சம் பேர் சிவப்பு ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். இதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுக்கு மத்திய அரசின் விலை குறைப்பு ரூ.200 உடன், மாநில அரசின் மானியம் ரூ.150 சேர்த்து, மொத்தமாக 350 ரூபாய் சிலிண்டர் விலையில் குறையும் என்று தெரிகிறது. ஆனால், சிலிண்டரை பெற்ற பிறகே பயனாளிகளின் வங்கிக் கணக்கில்தான் புதுச்சேரி அரசின் மானியம் வரவு வைக்கப்படும் என்கிறார்கள்…இதற்கான மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதால், இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.