நிலவில் பொறிக்கப்படும் இந்திய கொடி…
இன்று மாலை நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் பிரக்யான் லேண்டர் மூலம் நிலவில் இந்தியாவின் கொடி பொறிக்கப்பட உள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. விக்ரம் லேண்டர் கீழே இறங்க இறங்க அதில் இருக்கும் சென்சார்கள் மூலம் லேண்டர் சரியாக இறங்கும் இடம் கணிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் மாற்றங்கள் தேவைப்பட்டால் கூட செய்யப்படும்.
நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா என்று பெருமையை இதன் மூலம் இந்தியா பெற இருக்கிறது. இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்குகிறது சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர். இணைப்பு: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இரண்டுக்கும் இடையில் எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் ரேடியோ அலைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நாம் பூமியில் பயன்படுத்தப்படும் அதே ரேடியோ சிக்னல்தான் இங்கேயும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இவை மிக எளிமையாக பிரச்சனையே இன்றி இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் 4 வருடம் கழித்தும் இயங்கி வந்ததால்தான் இந்த முறை ஆர்பிட்டரையே இஸ்ரோ அனுப்பாமல் செலவை மிச்சம் செய்தது. ஆர்பிட்டர் இல்லாமலே இஸ்ரோ விக்ரமை அனுப்பியது. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய பின் சிக்னலை பெற மட்டுமே முடியும். முறையாக சிக்னலை வேகமாக அனுப்ப முடியாது. இதற்கு ஆர்பிட்டர் தேவை. அதற்காகவே சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் உடன் விக்ரம் இணைந்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது முக்கியமான தகவலை பூமிக்கு அனுப்பவும், தொலைத்தொடர்பு ரீதியாக விக்ரம் லேண்டருக்கு உதவவும் இந்த ஆர்பிட்டர் உதவியாக இருக்கும். பூமிக்கு வேகமாக தகவல்களை அனுப்ப இந்த ஆர்பிட்டர் உதவும்.
முத்திரை பதிக்கும்: நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கிய பிறகு, விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடையும், பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கும். பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வரும். இதனால் பிரக்யான் உருளும் போது, சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் டயரில் பழைய பச்சை குத்தும் அச்சு போலவே இந்திய மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரை இருக்கும். இது நிலவில் உருளும் போது மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரையை பதித்துக்கொண்டே செல்லும். இதன் மூலம் நிலவில் பச்சை குத்தியது போன்ற தோற்றம் ஏற்படும். நிலவின் ஈர்ப்பு விசை குறைவு மற்றும் அடர்த்தி காரணமாக மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரை அப்படியே அங்கேயே பல ஆயிரம் ஆண்டுகள் கூட இருக்கும். இந்தியா அங்கே சென்றதற்கான அடையாளமாக இது இருக்கும்.