ஜார்க்கண்ட் ஆளுநருடன் ரஜினிகாந்த் சந்திப்பு
இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பேசினார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வசூல்ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன், கடந்த 9ஆம் தேதி, தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டுச் சென்றார் ரஜினி. ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாகக் கொண்ட ரஜினிகாந்த். கரோனா காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு செல்வதை தவிர்த்தார்.
தற்போது இமயமலை சென்றுள்ள ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளார். முதலில் ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்ற அவர், ரிஷிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தரகண்ட்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்ட அவர், பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றும் வழிபட்டார். இந்த நிலையில், தற்போது ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்குச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். அங்குள்ள யோகதா சத்சங் தலைமையகம் சென்று அங்குள்ள சன்னியாசிகளை சந்தித்துள்ளார். பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து இன்று (ஆக. 17) உ.பி. மாநிலம் லக்னோ செல்லும் அவர், நாளை அங்கிருந்து சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.