காவிரியில் நீர் திறப்பு; நிரம்பும் கபினி அணை பருவமழை தீவிரம்…
கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் சாலையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்கிறது.
இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு கணிசமான அளவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2283.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4442 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 6126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.46 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 361 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 944 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் குறைந்து போனதால் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப் படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை11 மணிக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வரத்து இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த 3 நாட்களாக சற்றே அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடகா மாநிலம் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.