புதிய பாஸ்போர்ட் வாங்க மத்திய அரசு அறிவித்த புதியவசதி..!
புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், அதற்கனான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. நீங்கள் இந்தியாவில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல கண்டிப்பாக பாஸ்போர்ட் என்று அழைக்கப்படும் கடவுச்சீட்டு அவசியம் ஆகும். ஏனெனில் இந்தியாவில் பிறந்த நம்மை பற்றி முழு தகலும் அந்த பாஸ்போர்டில் இடம் பெற்றிருக்கும். அவர்கள் நாட்டிற்கு வருபவர் குறித்து முழு தகவலை அந்த நாட்டால் இதன் மூலம் அறிய முடியும். பாஸ்போர்ட் பெற நாம் மத்திய அரசின் இணையதளத்தில் www.passportindia.gov.in விண்ணப்பிக்க வேண்டும். இதுவே அதிகாரப்பூர்வ முறையாகும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விட முடியும். நான்கு வகையான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகிறது. அவை ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplomatic) ஜம்போ (Jumbo)என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகிறது.
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு வழங்கப்படும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படும். பாஸ்போர்ட் பெற இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).
ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை நீங்கள் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். புதிய பாஸ்போர்டை புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும். பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்? ஆதார் எண் கண்டிப்பாக வேண்டும். பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை , வங்கி கணக்கு புத்தகம் இருக்க வேண்டும் . பிறப்புச் சான்றிதழ் வேண்டும். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை. மற்றவர்கள் பள்ளி சான்றிதழை பிறப்பு சான்றிதழாக பயன்படுத்த முடியும்.
தட்கல் திட்டம் மூலம் விரைவாகவும் பாஸ்போர்ட் பெற முடியும் அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு “தட்கல் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் பாஸ்போர்ட் பெற விரும்புவோருக்கு முக்கியமான சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதன்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது தேவையான துணை ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான டிஜிலாக்கர் செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: ” விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பி.எஸ்.கே-க்கள்) / அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பி.ஒ.பி.எஸ்.கே-க்களில்) ஆவணங்களின் ஒட்டுமொத்த பரிசீலனை நேரம், தடையற்ற சரிபார்ப்பு ஆகியவற்றைக் குறைக்க, தேவையான துணை ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான டிஜிலாக்கர் (Digilocker) செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் டிஜிலாக்கர் மூலம் பதிவேற்றினால் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையப்பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, டிஜிலாக்கர் மூலம் ‘ஆதார் ஆவணம்’ ஏற்கப்படும் வசதியை அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. முகவரி / பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்களில் ஒன்றாக ‘ஆதார்’ சமர்ப்பிக்கப்பட்டால், இணையப்பக்கத்தில் ‘டிஜிலாக்கர் பதிவேற்ற’ ஆவண செயல்முறையைப் பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.