இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற பட வேண்டும் .

2 years ago
153

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி.

   இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர்
ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று திரு. கோத்தபய ராஜபக்சே வெற்றி
பெற்றுள்ளதால், இலங்கையில் வாழ்கிற சிறுபான்மை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த 2009
இல் நடைபெற்ற போரின் போது, இலங்கை அதிபராக இருந்த திரு. ராஜபக்சே தலைமையிலான அரசில் ராணுவத்துறை செயலாளராக பணியாற்றியவர்
   தான் இன்றைக்கு அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமற்ற
முறையில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் இன்றைக்கு அதிபராக தேர்வு பெற்றிருப்பதனால் தமிழ் மக்களிடையே அச்சமும், பீதியும்
ஏற்பட்டுள்ளது.
    இலங்கையில், தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை பெற்றுத் தருவதற்காக காந்திய வழியில் போராடியவர் மறைந்த தந்தை செல்வா என்கிற செல்வநாயகம். 1957 இல் பண்டார நாயகாவுடனும், 1965 இல் சேனநாயகாவுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாததால், 1965-க்கு பிறகு சமஷ்டி (Federal) கொள்கையை வலியுறுத்தினார். இறுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தொடங்கப்பட்டு சுதந்திர தமிழ்த் தாயகம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அவரது வழிமுறை மீது நம்பிக்கை இல்லாத சில இளைஞர் குழுக்கள் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதம் ஏந்திய போராட்டத்தை தொடங்கின. இச்சூழலில் ஜூலை 1983 இல் வரலாறு காணாத கலவரம் தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டது.

   இந்தப் பின்னணியில் அன்று பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜீவ்காந்தியும் தலையிட்டு தீர்வு காண தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை அணுகுவதில் இருவிதமான சித்தாத்தங்கள் இருந்தன. ஒன்று செல்வா வழியில் ஜனநாயக முறையில் போராடி தேர்தல் மூலம் மாநில முதலமைச்சரை தேர்வு செய்து அதிகாரப் பகிர்வை பெருமளவில் பெற்று சம உரிமையுடன் வாழ்தல். இதனை இந்தியாவும், உலகின் பல நாடுகளும் ஆதரித்து ஏற்றுக் கொண்டன.
   மற்றொன்று ஜனநாயக வழியில் தீர்வு காண முடியாது, ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தின் மூலமே வெல்ல முடியும் என்ற அணுகுமுறை. இதை பல்வேறு இளைஞர் குழுக்கள் மேற்கொண்டன.
இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க, இனக் கொடுமைக்கு முடிவு காண ஜூலை 1987 இல் இந்திய – இலங்கை உடன்பாட்டை
   அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் உருவாக்கினார்கள். இதன்மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக
இணைக்கப்பட்டு தமிழ்த் தாயகம் உருவாக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்கிற சமஉரிமையைப் பெற்றது.     தமிழர்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு பெறுகிற வகையில் பல்வேறு உரிமைகளை இந்த ஒப்பந்தம் பெற்றுத் தந்தது. இந்த ஒப்பந்தத்தின்
   அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு
பாதுகாப்பு கவசமாக இன்றைக்கும் விளங்குவது 13-வது திருத்தம் தான். இதைப் பெற்றுத் தந்தவர் ராஜீவ்காந்தி என்பதை எவரும் மறுத்திட இயலாது. ஆனால்,
இலங்கை அரசுகள் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தின் முழு பலனை தமிழர்கள் பெற விடாமல் தடுத்து வருகின்றன.
சிங்கள இனவாத அரசியலின் காரணமாக சிறுபான்மைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிற பொறுப்பை நெடுங்காலமாக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துகிற வகையில் இலங்கையில் வேற்று நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சீனாவைச் சார்ந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். சீனாவிடமிருந்து அதிக நிதியுதவிகளை இலங்கை பெற்று வருகிறது. இதன்மூலம் இலங்கையின் புவிசார் அரசியல் இந்தியாவுக்கு எதிராக சென்றுவிடுமோ என்கிற அச்சம் இந்திய அரசுக்கு இருக்கத் தேவையில்லை. இலங்கையை பொறுத்தவரை மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியாவின் ஆலோசனைகளை மீறி செயல்படுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாகும். இந்தச் சூழலில் எந்த நிலையிலும் இலங்கையில்
  வாழ்கிற தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற பொறுப்பை புவிசார் அரசியலைக் காரணம் காட்டி மோடி அரசு தட்டிக் கழிக்கக் கூடாது.
  இலங்கையில் வாழ்கிற தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற இரா. சம்பந்தன்
மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோர், அதிபராக தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அனுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக் கருதுகிறார்கள். கடந்த அதிபர்
  தேர்தலில் பெரும்பாலான தமிழர்கள் கோத்தபயவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதே இந்த அச்சத்திற்கு காரணமாகும்.
 இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு என்கிற ஒற்றை லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதை நோக்கித் தான்
  அவர்களது வழிமுறையும் இருந்து வருகிறது. இந்தியாவிற்குள் தமிழகம் இருப்பதைப் போல, அதிக அதிகாரங்களுடன் ஒரு மாநிலம் அமைவதே
  இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இதைத் தான் இலங்கை தமிழர்களும் விரும்புகிறார்கள். மாறாக, தமிழ் ஈழம் என்பது தீர்வாக
இருக்க முடியாது.
  நீண்டகாலமாக தமிழர்களுக்கு 13-வது திருத்தத்தின்படி நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரப் பகிர்வு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. இத்தகைய
   உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின்
வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து
  தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான
பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  Recent Posts

  post by date

  November 2021
  M T W T F S S
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930