சக்தியும் சிவமும் சேர்ந்த நிலையே உயிர்களின் தோற்றம்

 சக்தியும் சிவமும் சேர்ந்த நிலையே உயிர்களின் தோற்றம்

இந்துமதத்தில் பெண்களுக்கு இரண்டாம்தரமான இடம் அளிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ரிக்வேதம் அவர்களை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிடுகிறது. (பத்தாவது மண்டலம்) மகாபாரதத்தில் பெண்களை வைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உத்தியோகப் பருவத்தில் வருகிறது. மகாபாரதத் திலேயே அனுசான பருவத்தில், பெண்களை மகிழ்ச்சிகரமாகவும் மனநிம்மதியுட னும் வைத்துக்கொள்ளாத நாடு முன்னேற முடியாது என்ற குறிப்பு வருகிறது.

அர்ஜுனனுடைய மனைவி சித்தராங்கதா புகழ்பெற்ற வீராங்கனையாக விளங்கி இருக்கிறாள். உபநிடதங்கள் பலவற்றிலும் பெண்கள் வேதாந்த சர்ச்சையில் முக்கியமான இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிருகதா ரண்யக உபநிடதத்தில் கார்க்கி என்ற பெண்ஞானி யாக்ஞவல்கியரிடம் சாமர்த்தியமான கேள்விகளைக் கேட்கும் பகுதி வருகிறது.

நமது வாழ்க்கைக்கு மிக அவசியமான பூமி, நீர் தரும் நதி, கலைகளை அருளும் தேவி, சக்தியைக் கொடுக்கும் தேவி, செல்வத்தை வழங்கும் தேவி ஆகிய வடி வங்கள் அனைத்தும் பெண்களே. ஆக இந்து மதம் மற்ற மதங் களைக் காட்டிலும் பெண்களுக்கு உயர்ந்த இடத்தையே அளித்திருக்கிறது. பிற்காலத்தில் படை யெடுப்பின்போது, பெண்களுக்குப் பலமுறையிலும் தீங்கு இழைக்கப்பட்டது. அவற்றிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காகவே அவர்கள் குடும்பத்தின் எல்லைக்குள் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கப்பட் டனர்.

ஆலயங்களில் சிவ வழிபாட்டுக்குரிய சின்னமாக அமைந்திருப்பது சிவலிங்கம். பரந்த கருத்துக்கள் பல இச்சின்னத்தில் புதைந்து கிடக்கின்றன. ஆவுடையாள் என்னும் கீழ்ப்பகுதி, சக்தியின் சின்னம். அதில் நாட்டப் பெற்றிருக்கும் லிங்கம் சிவத்தின் சின்னம். சிவசக்தியின் ஐக்கியத்தால் சராசரங்கள் அனைத்தும் தோன் றியுள்ளன என்பதை அது குறிக்கிறது. உருவமற்ற பொருள் உருவம் எடுக்கவும் வல்லது என்பதை அது உணர்த்துகிறது.

உலகில் உள்ள உயிர்கள் காமத்துக்கு வசப்பட்டு, குடும்ப வாழ்க்கையில் இறங்கு கின்றன. சிவமும் – சக்தியும் அவர்களுக்குப் புகட்டும் பாடம் அதற்கு மாறானது. ஆசையை வெல்லுபவர்களே வாழ்க்கையில் வெற்றி காண் கிறார்கள். அண்ண லின் அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு, உமாதேவி நெடுங்காலம் தவம் புரிந்தாள். சிவபெருமானோ தனது நிறைநிலை கலையாது பூரணப் பொரு ளாகவே நிலைத்திருந்தார். இந்த நிலைக்குக் ‘கோரத்தபசு’ என்றும், ‘உக்கிரத்தபசு’ என்றும் பெயர்.

உமாதேவியார் அவரை ஆராதித்துக் கொண்டிருந்தபோது, அந்த ‘உக்கிரத் தபசை’க் கலைக்கக் காமத்துக்கு உரிய தேவனான மன்மதன் வந்தான். காம பாணத்தைத் தொடுத்துத் தவத்தைக் கலைத்து இச்சையை உண்டாக்க முயன் றான். ஆனால், சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை எரித்துச் சாம்பலாக்கிவிட்டார். இந்த நிகழ்ச்சி காமதனம் என்று இன்றும் தமிழ்நாட்டில் பல கிராமத்துக் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இப்படி கொண்டாடப்படு வதன் தத்துவம் என்ன?

ஆசையை வேர் அறுத்த பின்பே சிவமும் சக்தியும் ஒன்றுபட்டன. ஆசைகளை ஒழித்தபின்பே ஒருவனுக்கு வாழ்க்கையில் சக்தியின் அருளும் வெற்றியும் கிடைக்கும். அதையே இந்தப் பண்டிகை விளக்குகிறது. சக்தியும் – சிவமும் சேர்ந்த நிலையே உலகில் அனைத்து உயிர்களின் தோற்றம். இதையே சிவ லிங்கம் விளக்குகிறது. காமத்துக்கு அடிமைப்படாத மனை வாழ்வில், மாட்சிமை கள் அனைத்தும் நிறைந்துள்ளன என்பதே சிவபெருமானின் வடிவம் தரும் உண்மை.

-சுவாமி சித்பவானந்தர்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.