தமிழக வரலாற்றில் தன்னிகரில்லா தலைவர், பழம்பெருமையில் புனிதத்தைக் கண்டவர், கறைபடாத கைக்குச் சொந்தக்காரர், மக்கள் கவிஞர், மக்கள் பேச்சாளர், மக்கள் எழுத்தாளர், வாழ்வில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தவர், உண்மை யான அரசியலாளராகத் திகழ்ந்தவர் பா. ஜீவானந்தம்.
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பட்டத்தார் – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.
• இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.
• பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்” என்ற நாவலை எழுதினார். “ஞானபாஸ்கரன்” என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.

• காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
• பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப் பினும் பகத்சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடிய வில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.
• சிறையிலிருந்து பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை – கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தது அன்றைய காவல் துறை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

• ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்கு மிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளி யேறினார். அப்போது அவருக்கு வயது 17.
• வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.
• கடலூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
• சென்னை ராஜ்ஜியத்தை தமிழ்நாடு என்று மாற்றுக என்று மாநில சீரமைப்புத் தீர்மானத்தின் மீது 29-03-1956ல் முழக்கமிட்டு ப.ஜீவானந்தம் முதன்முதலில் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பினார்.
• தமிழ்நாட்டில் சோஷலிஸத்துக்கு வெகுஜன ஆதரவைத் திரட்டுவதில் தலைசிறந்த பிரசாரகராக விளங்கியவர் ஜீவானந்தம். சோஷலிச பிரசாரகராக இருந்ததோடு சோஷலிஸ்ட் இயக்கத்தை உருவாக்கவும் பாடுபட்டார். தமிழகத்தின் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய சிற்பிகளில் முதன்மையானவர் ஜீவா. மார்க்ஸியம் கற்பித்த ஒருமை நோக்கைப் பாரதியிடம் கண்டார் ஜீவா. பாரதி மார்க்ஸியவாதி அல்ல. அத்வைத வேதாந்தி. விவேகானந்தர் வழியில் நின்று வேதாந்த வெளிச்சம் பெற்ற பாரதி யுகப்புரட்சி வீர்ராகச் சிறந்ததை உணர்ந்தார் ஜீவா.

• வாழ்வும் சமயமும் இரண்டறக் கலந்த மாநாட்டில், சமய நூல்களைக் கண்மூடித் தனமாக வெறுக்கும் போக்கு அறியாமையின் பாற்பட்டதாகுமென்பதை உணர்ந்த அவர் தேவார திருவாசகங்களில் திளைத்தார்; ஆண்டாள் பாசுரத்தில் ஈடுபட்டார்; வள்ளலார் வாக்கில் இதயத்தைப் பறிகொடுத்தார். சமயக்குரவர்களின் ஆத்ம தூய்மையும் மனிதப்பண்பும் சான்றாண்மையும் அவரது நாவில் புது விளக்கம் பெற்றன. சங்ககாலச் சான்றோர்களும் வள்ளுவரும் இளங்கோ அடிகளும் அவரை ஈர்த்தனர். தமிழை வாழ்வித்த உலக மகா கவியான கம்பனது இராமாயணத்தின் சிறப்புகளில் மெய்மறந்து ஈடுபட்டார்.
• தனி உடைமையின் தனிப்பெரும் பகைவரான ஜீவாவின் காதில் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பற்றிய செய்திகள் விழுந்தது. “இத்தகைய தனித் தமிழரைப் பார்க்க வேண்டும்!” என்ற ஆசை எழுந்தது. அதனால் இவர் தமது பெயரையும் தனித் தமிழில் ஜீவ ஆனந்தம் என்பதை ‘உயிரின்பன்’ என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
• பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்கு ஒரு செய்தித்தாள் அவசியம் என்று ஜீவா எண்ணினார். எனவே கட்சிக்காகவும், செய்தித்தாள் தொடங்கு வதற்காகவும் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்ததன் பின்னர், சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலை யிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், “பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?” என்றார். “சாப்பிடலாமே! ஆனால், காசு ஏது?” என்றார் ஜீவா. “அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே” என்றார் அந்த தோழர். ஜீவாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன பேசுறீங்க… அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசுகூட எடுக்கக் கூடாது” என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

• அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒரு முனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமை யுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.
• பிரபல எழுத்தாளரான வ.ரா.வும் ஜீவாவின் குருநாதராவார். ஜீவாவின் தனித்தமிழ் மோகத்தைப் போக்கியவர் வ.ரா. என்பது பலரும் அறிந்ததே. ஒரு சமயம் ஜீவாவின் தனித்தமிழ் சொற்பொழிவு ஒன்றை வ.ரா. கேட்க நேர்ந்தது. தனித்தமிழில் பேச முடியாது என்று அதுவரை நம்பியிருந்த வ.ரா. பிரமித்துப் போனார். பிறமொழிக் கலப்பு ஒரு சிறிதும் இன்றி ஜீவாவால் பேச முடிந்ததே என்ற ஆச்சர்யப் பரவசத்தில் மூழ்கிப் போனார் வ.ரா. ஆனால் உடனே சமாளித்துக் கொண்டார். “இவை தேவையா? இவ்வளவு சிரமப்பட்டு தனித்தமிழில் சிலம்பம் வீச வேண்டுமா?” என்ற கேள்வியை வ.ரா. ஜீவாவை நோக்கிக் கேட்டார். “தமிழ்நாட்டின் நன்மையை உத்தேசித்து, தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து, தயவு செய்து இத் தனித்தமிழை விட்டுவிடுங் கள்” என்று வ.ரா. ஜீவாவிடம் வேண்டிக் கொண்டார். “அது ஜனங்களுடைய மொழி அல்ல” என்றும் வ.ரா. அழுத்திக் கூறினாராம். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்பும் ஜீவா தமது தனித் தமிழ்க் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
• ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப் படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடைமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
• கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதன்முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளைப் பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
• வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961). கொள்கை யைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959 இல் தொடங்கினார். அதில், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் “தமிழ் மணம் பரப்ப” என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933இல் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.
• அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலை களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர் களை எழுச்சி பெறச்செய்தன.
• ஜீவா பொதுவுடைமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப் பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டு கள் இருந்தார்கள்.

• ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவராகவும் அடையாளப் படுத்திக் கொண்டார். இந்திய காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார்.
• கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்று வதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.
• கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார்.
• மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சி களை உருவாக்கியுள்ளார். 1940களின் இறுதி ஐம்பது களின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டன.
• காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.

• ஈ.வெ.ராவோடு கருத்து முரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).
• எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒரு நூலைப் படித்துக் கொண்டிருக்கும் வழக்கமுடைய ஜீவா, தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட கிடைத்தற்கரிய, போலோநாத் தாஸ் குப்தா எழுதிய “மார்க்ஸிசம், மெட்டீரியலிஸம் அண்டு டயலக்டிஸம்” என்ற நூலை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். ஆனால் அதைப் படிக்காமலே அவர் மறைந்து விட்டார். ஆனாலும் ஏட்டிலும் படிக்கமுடியாத வாழ்வை வாழ்ந்துவிட்டு போன அந்தத் தலைவரை இந்நாடு ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது.


• தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தம் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்ப் பட்டுள்ளது.
Recent Posts
- ராஜிவ் காந்தி – மறக்கமுடியாத மாமனிதர் -நினைவு நாள் செய்தி May 20, 2022
- வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு எப்படி வந்தார்? May 20, 2022
- தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி நினைவு நாள் May 19, 2022
- டான் – திரை விமர்சனம் May 18, 2022
- ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு -சர்ச்சை May 18, 2022
- தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன் May 18, 2022
- தலம்தோறும் தலைவன் | 3 | ஜி.ஏ.பிரபா May 18, 2022
- உலக உயர் ரத்த அழுத்த தினம் சிறப்புக் கட்டுரை May 17, 2022
- தில்லி மாதிரிப் பள்ளியை உருவாக்கிய பெண் எம்.எல்.ஏ. May 17, 2022
- விஜய் மக்கள்இயக்கம் நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது! May 16, 2022
- நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ் May 16, 2022
- தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன் May 16, 2022
- மீனாட்சி அம்மன் பக்தராகவே மாறிப் போன மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர் May 16, 2022
- பங்குச்சந்தையில் ஏன் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன? May 15, 2022
- சர்வதேச குடும்ப தினம் – 2022 செய்திக் கட்டுரை May 15, 2022
post by date
- May 2022 (53)
- April 2022 (90)
- March 2022 (87)
- February 2022 (109)
- January 2022 (87)
- December 2021 (83)
- November 2021 (92)
- October 2021 (83)
- September 2021 (34)
- August 2021 (45)
- July 2021 (76)
- June 2021 (112)
- May 2021 (92)
- April 2021 (32)
- March 2021 (40)
- February 2021 (5)
- January 2021 (58)
- November 2020 (91)
- October 2020 (90)
- September 2020 (47)
- August 2020 (104)
- July 2020 (102)
- June 2020 (160)
- May 2020 (105)
- April 2020 (7)
- March 2020 (15)
- February 2020 (215)
- January 2020 (357)
- December 2019 (514)
- November 2019 (475)
- October 2019 (328)
- September 2019 (214)
- March 2019 (1)
- September 2018 (1)