• தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 10 | சாய்ரேணு

பயணங்கள் தொடர்வதில்லை | 10 | சாய்ரேணு

3 days ago
33
  • தொடர்
  • பயணங்கள் தொடர்வதில்லை | 10 | சாய்ரேணு

10. தீப்பெட்டி

“கான் ஐ ஸ்மோக்?” என்றவாறே பதிலுக்குக் காத்திராமல் சிகரெட்டைப் பற்ற வைத்தான் ப்ரிஜேஷ்.

அவனருகில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்த், அஜய் இருவரும் பயம் ஒருபுறம், ஆர்வம் ஒருபுறம் என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாய்த் தவித்தனர். ப்ரிஜேஷிடம் அத்தகைய தவிப்பு எதுவும் இல்லை.

தன்யா, தர்மா, தர்ஷினி அவன் எதிரில் அமர்ந்திருந்தார்கள். மௌனமாக அவனையே பார்த்தார்கள்.

“வெல்?” என்று ப்ரிஜேஷே மறுபடி பேச்சைத் தொடக்கினான்.

“சின்ன ஏரியா இந்த டைனிங் கார். ஏர்-கண்டிஷண்ட் கோச். இங்கே ஸ்மோக் பண்றதுக்கு முன்னாடி யோசிக்கணும். சரி, ஸ்மோக் பண்ணத்தான் போறீங்கன்னா, அட்லீஸ்ட் சிகரெட் பற்றவைத்த தீக்குச்சியையாவது ஆஷ்-ட்ரேல போடணும்” என்றாள் தன்யா.

“ஸாரி டார்லிங்” என்றவாறே கீழே குனியப் போன ப்ரிஜேஷ், பளாரென்று தன்யா அறைந்ததில் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான். ஸ்ரீகாந்தும் அஜய்யும் பதறி அவனைத் தூக்கினார்கள்.

“ஹேய், லுக்!” என்றான் ப்ரிஜேஷ் கோபத்தோடு, ஒரு விரலைத் தன்யாவை நோக்கி மிரட்டும் விதமாக நீட்டியவாறே.

“மேன்னர்ஸ், மிஸ்டர் ப்ரிஜேஷ்! அட்ரஸ் மீ மேடம், ஆர் மிஸ் தன்யா. ஸிட் ப்ராப்பர்லி. ரிமெம்பர் தட் யூ ஆர் அ ஸஸ்பெக்ட் இன் அ மர்டர் கேஸ்!” என்று ஆங்கிலத்தில் பொரிந்தாள் தன்யா.

“எனக்கும் இந்தக் கேஸுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது” என்றான் சுருங்கிப் போயிருந்த பிரிஜேஷ். “மேம்” என்று கடைசியில் பயத்துடன் சேர்த்துக் கொண்டான்.

“உனக்கும் சுப்பாமணிக்கும் சம்பந்தம் இருக்கே” என்றாள் தன்யா.

அவள் ஒருமைக்கு மாறியதை ப்ரிஜேஷ் கவனிக்கவில்லை. “ஆமா, இருக்கு. அவர் என்னுடைய தூரத்துச் சொந்தக்காரர். எங்க வெல்விஷர். எங்க குடும்பத்தில் என்ன ஃபங்க்ஷன் நடந்தாலும் முன்னே நின்னு நடத்தித் தருவார். அவரை நான் கொல்றதுக்கு என்ன காரணம்? ரப்பிஷ்!” என்றான். பேசப்பேச அவனுக்குத் தைரியம் வந்துவிட்டது போலிருந்தது.

“அவர் உன்னை மிரட்டறதுக்கு மட்டும் என்ன காரணம்?” மென்மையாகக் கேட்டாள் தர்ஷினி.

“என்னது, அவர் என்னை ஏன் மிரட்டணும்? ரப்பிஷ்!” என்றான் ப்ரிஜேஷ் மறுபடியும்.

“மேடம், நாங்க மூணு பேரும் எங்க ஃபேமிலியோடு கல்யாணத்துக்கு ட்ராவல் பண்ண வேண்டியவங்க. சுப்பாமணியோடு வரணும்னே இந்த ட்ரெயின்ல வரோம். எங்களுக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணினவர். அவர் ஏன் மேடம் எங்களை மிரட்டப் போறார்?” என்றான் ஸ்ரீகாந்த்.

“அதை நாங்க என்ன சொல்றது? நீங்கதான் சொல்லணும். சுப்பாமணி உங்களை மிரட்டறதா ப்ரிஜேஷ் தானே சொன்னார் எங்ககிட்ட?”

ப்ரிஜேஷை ஸ்ரீகாந்தும் அஜய்யும் கோபமாய்ப் பார்க்க, ப்ரிஜேஷ் தடுமாறினான். “ஏதோ போதையில் உளறியிருப்பேன். அதை மைண்ட் பண்ணாதீங்க மேம்” என்றான்.

“உங்களை அவர் ஏன் மிரட்டறார்னு நான் சொல்லவா?” என்றாள் தன்யா திடீரென்று. “ஒரு விவகாரத்தில் நீங்க மாட்டியிருக்கீங்க. அதிலிருந்து உங்களைச் சுப்பாமணி ப்ளாக்மெயில் செய்துட்டிருக்காரு, கரெக்டா?”

“ஆமா, அப்படியே கண்டுபிடிச்சுட்டீங்க!” என்றான் ப்ரிஜேஷ் கேலியாக. “உங்களுக்கு எங்க விஷயம் எதுவும் தெரியாது. சும்மா நூல்விட்டுப் பார்க்கறீங்க! ஹலோ, நீங்க போலீஸும் இல்லை, நாங்க குற்றவாளிகளும் இல்லை. உங்க கெஸ்க்கெல்லாம் நாங்க பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்றான் கோபமாக.

“உன் அக்காவுடைய ஃப்ரெண்ட்” என்றாள் தன்யா. “அவளை ஈவ் டீஸ் பண்ணியிருக்கீங்க. விஷயம் கேஸாகிடுச்சு. அதிலிருந்து சுப்பாமணிதான் உங்களை மீட்டிருக்கார். ஆனா அதைச் சொல்லிக் காட்டி உங்களை மிரட்டிட்டே இருந்தார். உங்க மூலமா கம்பெனிலயும் பெரிய பொஸிஷனுக்கு வந்தார். கரெக்டா?” என்றாள்.

இதையெல்லாம் அவள் கண்களை மூடிக் கொண்டு சொன்னதால் ஏதோ ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்வதுபோல் தோன்றியது.

“இ… இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று தவித்துக் கொண்டே கேட்டான் இதுவரை பேசாதிருந்த அஜய்.

தன்யாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை தோன்றி உடனே மறைந்ததை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. “உங்களுக்கு லிக்கர், மற்றும் தேவையானதெல்லாம் சப்ளை பண்ணுவார் சுப்பாமணின்னு நினைச்சு அவரோட ட்ரெயினில் ஏறிட்டீங்க. ஆனா அவர் பலர் கூட வந்திருக்காங்கங்கறதால தன் கையைச் சுருக்கிட்டார். அது மட்டுமில்லாம, ரகசியமா உங்களை மிரட்டவும் ஆரம்பிச்சார். சர்க்கஸ் மிருகத்துக்கு முன்னாடி சவுக்கை நீட்டற மாதிரி, எங்களை உங்க முன்னாடி நீட்டியிருக்கார், இல்லையா?”

ஸ்ரீகாந்த் ஒரு பெருமூச்சுவிட்டான். “மிஸ் தன்யா, இதுக்கு மேல உங்ககிட்ட எதையும் மறைக்கறதில் அர்த்தமில்லை…” என்றவன் அவனைத் திரும்பிப் பார்த்த அஜய்யிடமும் ப்ரிஜேஷிடமும் “சொல்லிடலாம்டா” என்று சொல்லிவிட்டு “நாங்க ஸ்டேஷனுக்கு வந்தபோதே சுப்பாமணி எங்களை ரிஸீவ் பண்ணி கேபின்ல விட்டுட்டு, பத்து நிமிஷம் பேசிட்டு இருந்தார். அப்போ புது லிக்கர் பாட்டில் ஒண்ணு கொடுத்து, இதை வெச்சு ட்ராவல் பூரா சமாளிக்கணும்னும், வேற… வேற எதுவும் கேட்கக் கூடாதுன்னும் சொல்லிட்டுப் போனார்.”

“அப்புறம் ப்ரிஜேஷ் ஒரு பிரச்சனை பண்ணிட்டான்” என்றான் அஜய். ப்ரிஜேஷ் தலைகுனிந்தான். இந்த விஷயத்தில் தன்யாவும் தர்ஷினியும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அஜய்க்கோ, ஸ்ரீகாந்துக்கோ தெரியவில்லை. தர்மாவுக்கே இன்னும் அவர்கள் சொல்லவில்லை.

“ஒரு சின்ன கலாட்டா ஆகிட்டது” என்றான் அஜய், ப்ரிஜேஷைப் பார்த்தவாறே. “அதுக்கப்புறம் சுப்பாமணி ரொம்பக் கோபமா எங்ககிட்டப் பேசினார். நாங்க சந்தோஷமா இருக்கறதும் இஷ்டப்படி சுத்தறதும் அவர் போட்ட பிச்சைன்னும், அவர் நினைச்சா எங்களை முடக்கிப் போட்டுட முடியும்னும் மிரட்டினார்…”

“சுற்றிச் சுற்றி இப்போ நடந்ததைப் பற்றிப் பேசறீங்களே தவிர, முன்னாடி என்ன நடந்தது, எதனால் சுப்பாமணி உங்களை மிரட்டறார், இதையெல்லாம் உடைச்சுச் சொல்ல மாட்டேங்கறீங்களே” என்றாள் தன்யா.

“அதுதான் உங்களுக்கே தெரிஞ்சிருக்கே, மேடம்! 2020 ஆரம்பத்தில் கோவிட் பரவ ஆரம்பிச்சப்போ, எங்க அக்கா – அதான் ப்ரிஜேஷோட அக்கா – யூ எஸ்ல இருந்தா. சரியா இங்கே ரிடர்ன் பண்றதா இருந்தபோது அவளுக்குக் கோவிட் அட்டாக் ஆகிடுச்சு… ஏர்போர்ட்டிலேயே அவளை நிறுத்திட்டாங்க. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிட்டா.

“இதனால் தவிச்சு போன எங்க சித்தப்பா, அவளை இந்தியாவுக்குக் கூட்டி வந்துடலாமா, அல்லது அவங்களாவது அங்கே போகலாமான்னு தெரிஞ்சுக்க டெல்லி கிளம்பிப் போயிருந்தார்.

“ஷி வாஸ் ஒன் ஆஃப் த ஃபர்ஸ்ட் விக்டிம்ஸ். அதனால் யாருக்கும் என்ன நடக்குது, என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாது எதுவும் புரியலை. அவளுக்கு என்னாச்சு, ஏன் இன்னமும் இந்தியா வரலை, இப்போ ஹெல்த் கண்டிஷன் என்ன – இதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்காக அக்காவோட காலேஜ் ப்ளஸ் ஹாஸ்டல் மேட் மிஸ் பரணி எங்கிறவங்க ப்ரிஜேஷ் வீட்டுக்கு வந்தாங்க. அப்போ வீட்டில் நாங்க மூணுபேர் தான் இருந்தோம்…”

அஜய் நீளமாகப் பேசி நிறுத்த, தர்மா, தன்யா, தர்ஷினி ஒரு பெருமூச்சுவிட்டார்கள்.

“மிஸ்பிஹேவ் பண்ணினீங்களா?” என்று கேட்டாள் தன்யா.

அஜய் வெட்கியவனாகத் தலையை லேசாக ஆட்டினான்.

“வெட்கமா இல்லை? உங்க அக்கா மாதிரியான பெண்ணை…” என்று ஆரம்பித்த தர்மாவைப் பார்வையால் அடக்கிய தன்யா “அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“அவங்க எங்ககிட்டருது தப்பிக்க வேகமாக ஓடினாங்க. மொட்டை மாடி ஏறிட்டாங்க. அங்கிருந்து நிலைதடுமாறி விழுந்து…”

தன்யா, தர்மா, தர்ஷினிக்கு உடல் சிலிர்த்தது.

“யெஸ். ஷி டைட். அப்போ, என் அப்பா கால் பண்ணி உதவியா இருக்க வரச் சொன்னதால், வீட்டிலிருந்து பணம் வாங்கிட்டுப் போக சுப்பாமணி அங்கே வந்தார். அவருக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் புரிஞ்சது. எங்களுக்குத் தைரியம் சொல்லிட்டு அவர் போலீஸைக் கூப்பிட்டார். பரணி இறந்தது ஒரு விபத்துன்னு அவர்களை நம்பவெச்சார். எங்க அக்காவோட நிலை கேள்விப்பட்டதும் அவ பைத்தியம் பிடிச்ச மாதிரிப் படிகளில் ஏறி ஓடினதாகவும், அங்கிருந்து தானாகவே கீழே விழுந்ததாகவும் போலீஸை நம்பவெச்சார். அதைத் தான் கண்ணால் பார்த்ததா ஸ்டேட்மெண்ட்டும் கொடுத்தார். ‘ஆக்ஸிடெண்ட் ஆர் சூயிஸைட் ட்யூரிங் டெம்பரிரிலி அன்சவுண்ட் மைண்ட்’ என்று போலீஸ் ரிப்போர்ட் எழுதிட்டாங்க…”

“அதிலிருந்து சுப்பாமணி எங்களுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டார். நாங்க என்ன கேட்டாலும் கொண்டு வந்துடுவார். அவர் என்ன கேட்டாலும் நாங்களும் செய்ய வேண்டியதாப் போச்சு” என்று ஒப்புக்கொண்டான் ப்ரிஜேஷ்.

“அதாவது, பெரிய வேலை, பெரிய சம்பளம் எல்லாம்?” என்று கேட்டாள் தன்யா. ப்ரிஜேஷ் தலையை ஆட்டினான். “அதுக்கு முன்னாடி கம்பெனில சின்ன வேலை பார்த்துட்டு இருந்தார் சுப்பாமணி. அதுவும் என் அப்பா பாவப்பட்டுப் போட்டுக் கொடுத்ததுதான்” என்றான்.

தன்யா தலையை ஆட்டினாள். பிறகு “ப்ரிஜேஷ், நீ ஓங்கோல்ல இறங்கறதுக்கு முன்னாடி சுப்பாமணியைத் தேடிட்டுப் போனதா சொல்லியிருக்க” என்று நினைவுபடுத்தினாள்.

“ட்ரிங்க் தீர்ந்துபோச்சு. அதான் வேற பாட்டில் அரேஞ்ச் பண்ண சுப்பாமணியோட கூப்பேக்குப் போனேன். அங்கே அவர் இல்லை. அவர் ஃப்ரெண்ட் சந்திரசேகரோட பேசிட்டிருப்பார்னு நினைச்சு நான் திரும்பிட்டேன்” என்றான் ப்ரிஜேஷ். “ஓங்கோல் ஸ்டேஷன் வந்ததும் சந்திரசேகர் கீழே இறங்கினார். அவரோடு சுப்பாமணி இல்லைன்னதும் அவர் ஓங்கோலில் இறங்கியிருக்கலாம்னு நானும் இறங்கிட்டேன்.”

“நீ ஏன் மற்ற கேபின்ல பார்க்கலை? கேடரிங் பேல?”

“ட்ரெயின் கிளம்பினதும் நான் சுப்பாமணியை எங்க கேபினுக்குக் கூப்பிட எட்டிப் பார்த்தேன். அவருடைய கூப்பேக்குள்ள சந்திரசேகர் போயிட்டிருந்தார்” என்றான் ப்ரிஜேஷ்.

*

“நான் சுப்பாமணியோட பேசிட்டிருக்கலாம்னு அவருடைய கூப்பேக்குப் போனது உண்மைதான். ஆனா நான் உள்ளே போகலை, அங்கே வேற யாரோ இருந்தாங்க. நான் சுப்பாமணிகிட்ட நாளைக்குப் பார்க்கறேன்னு சொல்லிட்டுத் திரும்பிட்டேன்” என்றார் சந்திரசேகர்.

“உள்ளே இருந்தது யாருன்னு கவனிச்சீங்களா?” என்று கேட்டாள் தன்யா.

“சுப்பாமணி வாசலை மறைச்சிட்டிருந்தார், அதனால தெரியலை. அதோட உள்ளே தீக்குச்சி கொளுத்தின மாதிரி முணுக் முணுக்னுதான் வெளிச்சம் இருந்தது. ஆனா…”

“ஆனா…”

“சுப்பாமணி ஒரு சின்ன பிஸ்டலைக் கையில் வெச்சிட்டிருந்தார். வெளியே வந்துக்கிட்டே அதைப் பேண்ட் பாக்கெட்டில் வெச்சுக்கிட்டார்” என்றார் சந்திரசேகர்.

“அவர்கிட்டப் பிஸ்டல் இருந்தது தெரியும்… ஆனா இப்போ அங்கே…” என்று சொல்ல ஆரம்பித்த தர்மாவை இடைமறித்தார் சந்திரசேகர்.

“சாரி, அது சுப்பாமணியோட பிஸ்டல் இல்லை. அது கொஞ்சம் பெரிசா இருக்கும். இது சின்னதா, கைக்கடக்கமா இருந்தது. சாதாரணமா பெண்கள் பயன்படுத்தற மாதிரி” என்றார் சந்திரசேகர்.

–பய(ண)ம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31