சொத்து சேர்க்காத 12 துறைகளின் அமைச்சர் யார்?

5 days ago
31

இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர், தமிழகத்தில் 12 துறை களுக்கு அமைச்சர், இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர், காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத் துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளுக்கு அமைச்சர் எனப் பல அடையாளங்களைப் பெற்றவர் கக்கன். இப்படி பல பதவிகளை வகித்தாலும், சொத்து சேர்க்காமல் எளிமையாகவே வாழ்ந்து மறைந்து வார்ந்கொண்டிருக் கிறவர் கக்கன்.

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த உள்ளூர் பூசாரிக் குடும்பத்தில் பிறந்தவர் கக்கன். எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால் மதுரை சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவரு மான அ.வைத்தியநாத ஐயரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது. 1934ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தி யைச் சந்தித்த கக்கன், சேவாசங்கப் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித் தார். 1939ல் காங்கிரசில் இணைந்தார். அ. வைத்தியநாதரின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் தோளோடு துணை நின்றார்.

1938ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு இந்த சேவா சங்கத்தினர் பட்டியலின மக்களுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து, வரலாற்றில் இடம் பிடித்தனர். அ. வைத்தியநாத ஐயர் கக்கனை தனது வளர்ப்புப் பிள்ளை போலவே கருதினார். 1955ல் அவர் உயிரிழந்தபோது, அவரது மகன்களைப் போல தானும் இறுதி கிரியைகளில் பங்கெடுத்தார் கக்கன்.

தொடர்ச்சியாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கக்கன், சிறைக்குச் செல்ல நேரிட்டது. அலிப்பூர் சிறையில் 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார் கக்கன்.

கட்சியிலும் அவருக்குப் பொறுப்புகள் தேடிவந்தன. இந்தியாவின் விடுதலை நெருங்கிய போது, 1946 ஜனவரியில் அமைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சபையின் உறுப்பினராகப் பதவியேற்றார் கக்கன்.

முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கக்கன். அ. வைத்தியநாதருக்குப் பிறகு, காமராஜரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர் கக்கன். கடைசிவரை அவரது தலைமையின் கீழே செயல்பட்டார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன், வெற்றிபெற்று பொதுப் பணித்துறை அமைச்சரானார். அதற்குப் பிறகு 1962ல் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கக்கன், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும், அதில் பலர் இறந்த தும் கக்கனின் பொது வாழ்வில் மிகப் பெரிய விமர்சனத்திற்குரிய நிகழ்வாக அமைந்தது. இனம், மொழி இந்த இரு விடயங்களில் தமிழர்களின் தனித்துவமான போக்கை கணிக்கத் தவறியதற்கு தேசிய காங்கிரஸ் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஓ.பி.ராமனிடம் தோல்வியடைந்தார் கக்கன்.

1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கக்கன் போட்டி யிட்டுத் தோற்றார். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கை யிலிருந்து விலகி னார். இறுதிக் காலத்தில் கக்கனுக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. அவ்வப்போது மதுரை பொது மருத்துவமனைக்கு நகரப் பேருந்தில் சென்று வருவார்.

அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், அரசு மருத்துவமனையில் சி வார்டில் இடம் கிடைக்கும். எட்டு கட்டில்கள் கொண்ட பொது அறைதான் சி வார்டு.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பிரமுகர் மதுரை முத்துவை சந்திப்பதற்காக ஒருமுறை அந்த மருத்துவமனை வந்தார். கக்கனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து கக்கனையும் சந்திக்கச் சென்றபோது அவர் சி வார்டில் ஒரு கட்டிலில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார்.

உடனடியாக டீனை அழைத்த முதல்வர், “இவர் இந்திய அரசியல் சாஸன அவையில் இடம்பெற்றிருந்தவர்; பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர்; இப்படி செய்து விட்டீர் களே” என்று கோபித்து உடனடியாக ஏ வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

மிகவும் நேர்மையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய அடிப்படையான குணங்கள். அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் யாராவது பரிசுப் பொருட்களைக் கொடுத்தால், அவற்றை ஏற்க மாட்டார். பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் பின்னணியில் கக்கனின் பங்களிப்பு இருந்தது. இவர் அமைச்சராக இருந்தபோதுதான் வைகை அணை கட்டப்பட்டது.

இவர் விவசாய அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் இரண்டு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டன. விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன். பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில் தான்.

கூட்டுறவு விற்பனை நிலையத்தின் வழியாக விவசாயிகளுக்கான பொருட்களை வழங்க வழிவகை செய்தவர் கக்கன். ரகசியக் காவலர் பிரிவைத் தொடங்கியது, லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கியது என கக்கனின் சாதனைகள் ஏராளம்.

23 டிசம்பர் 1981ல் மரணம் அடைந்தார் கக்கன்.

அரசியலில் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று இன்றும் நம்மை பேச வைத்ததுதான் அவரது வாழ்நாள் சாதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31